விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியின் நகரமைப்பு அலுவலராக சேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், நகரில் கட்டப்படும் கட்டிடங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவரது அலுவ லகத்தில் இவர் பணி செய்யக்கூடிய கணினி இருக்கையில் அவரது மகன் ராஜேஷ் அமர்ந்து கொண்டு பணி செய்து வருவதாகவும், கட்டிட வரைபட ஒப்புதல் கோரி வருவோரிடம் பேரம் பேசி வரு வதாகவும் நகர வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே சொத்துவரி, தண்ணீர் வரி, குப்பை வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில் கட்டிட வரைபட ஒப்புதலுக்கும் கூடுதல் தொகை கேட்டால் என்ன செய்வது என குமுறுகின்றனர்.
இது தொடர்பாக நகராட்சி ஆணையர் சேகரிடம் கேட்ட போது, “அவரது மகன் வருவது தனக்கு தெரியாது. இதுதொடர்பாக அவரிடம் எடுத்துரைத்துள்ளேன். இனிவரும் காலங்களில் இதுபோன்று தகவல் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவு றுத்தியுள்ளேன்” எனத் தெரிவித் தார்.