தமிழகம்

குன்னூரில் கட்டுமானப் பணியின்போது மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் பலி: ஒருவர் கவலைக்கிடம்; தருமபுரியை சேர்ந்தவர்கள்

செய்திப்பிரிவு

குன்னூரில் கட்டுமானப் பணியின் போது மண்ணில் புதைந்து 4 தொழி லாளர்கள் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த சின்ன வண்டிசோலை அருகே தனியார் தேயிலை எஸ்டேட்டில், சாலை மற்றும் சொகுசு விடுதிகள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக, தருமபுரி மாவட்டத்தில் இருந்து தொழி லாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

சாலைப் பணிக்காக, நேற்று நடந்த தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியில் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப்(20), ஆறுமுகம்(48), கார்த்திகேயன்(23), காமராஜ்(26), ஜனகர்(50) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள், சுமார் 20 அடி ஆழத்துக்கு குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக குழிக்குள் மண் சரிந்து, 5 பேரும் மண்ணில் புதைந்தனர். இதைப் பார்த்த பிற தொழிலாளர்கள், மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மார்பு அளவுக்கு மண்ணில் புதைந்திருந்த ஜனகர், உயிரோடு மீட்கப்பட்டார். குன்னூர் அரசு மருத் துவமனையில் முதலுதவிக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.

காவல் மற்றும் தீயணைப்புத் துறையினரின் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மண் அகற்றப்பட்டது. இருப்பினும், மற்ற 4 தொழிலாளர்களும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இவர்களது உடல், பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் சம்பவ இடத் துக்குச் சென்று விசாரித்தனர்.இதுதொடர்பாக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் கூறும் போது, “எஸ்டேட் உரிமையாளர், பணி ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரி டமும், இப்பணிகளுக்கு உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.

விதி மீறலா?

நீலகிரி மாவட்டத்தில், 33 டிகிரி சரிவுக்கு மேல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்ற விதி முறை உள்ளது. ஆனால், பல பகுதி களில் விதிமீறல் தொடர்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குன்னூரைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் சு.மனோகரன் கூறும் போது, ‘மாவட்டத்தில் கட்டிட விதிகள் மீறப்படுகின்றன. குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல எஸ்டேட்கள் அழிக்கப்பட்டு, ஆடம்பர பங்களாக்களாக உருமாறி வருகின்றன.

தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து இறந்த எஸ்டேட்டிலும், போதிய பாதுகாப்பு மேற்கொள்ளப் படவில்லை. சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக விதி மீறி பாறைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT