சென்னை: விதிமீறல் வாகனங்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் பொதுமக்கள் புகார்தெரிவிக்கலாம் எனச் சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, பெரும்பாலான நேரங்களில் சென்னையின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது. இதனால் மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லமுடியாமல் தவிக்கின்றனர். சில நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில்‘கூகுள் மேப்’ மூலம் வாகன நெரிசலைக் கண்காணித்து அந்த பகுதிகளுக்குப் போக்குவரத்து போலீஸார் விரைந்து சென்று நெரிசலைச் சீர்படுத்தி வருகின்றனர். நெரிசலுக்குச் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் வாகன ஓட்டிகளின் விதிமீறல்களும் காரணமாகக் கூறப்படுகிறது. இதையடுத்துசாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்பை சென்னை போலீஸார் கோரியுள்ளனர். மேலும் விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன் திருவான்மியூரில் எதிர் திசையில் சென்ற ஐபிஎஸ் அதிகாரியான ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா வாகனத்துக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், நடிகர் விஜய்வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அடர்த்தி கொண்ட கருப்பு நிறபிலிம் ஒட்டியிருந்ததால் அதற்கும் போக்குவரத்து போலீஸார் ரூ.500 அபராதம் விதித்தனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் புகைப்படத்துடன் ஆன்லைன் மூலம்புகார் அளித்ததை அடிப்படையாக வைத்தே இந்த 2 விதிமீறல்களுக்கும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்திருந்தனர்.
சாலையில் சிக்னல்கள் தோறும் நின்று கொண்டு விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்த போக்குவரத்து போலீஸார் தற்போது ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறே விதிமீறல் வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையில் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி யானைக்கவுனி, வேப்பேரி, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, கோயம்பேடு,தேனாம்பேட்டை, கிண்டி உட்பட சென்னையில் 11 இடங்களில் 15 சாலை சந்திப்புகளில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீஸார் காவல் ஆணையர்அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில்இருந்தவாறே அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் விதிமீறல் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் வாட்ஸ்-அப்(9003130103), இன்ஸ்டாகிராம் (chennaitrafficpolice), ட்விட்டர் (@ChennaiTraffic), ஃபேஸ்புக் (Greater Chennai Traffic Police) ஆகிய சமூக வலைத்தள பக்கத்தில் போக்குவரத்து போலீஸாரிடம் புகைப்படம் மற்றும்வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, போக்குவரத்து விதிமீறல் வாகனஓட்டிகள் தொடர்பாகப் புகார் தெரிவிக்கலாம் எனச் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறுகையில், "வாகனஓட்டிகள் சாலை விதிகளைக் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்து போலீஸார் இல்லை என நினைத்து சாலை விதிகளை மீறினால் கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்துவிடும். தற்போது அனைவரிடமும் ஸ்மாட்போன் உள்ளது.
அதன் மூலம் பொதுமக்களே விதிமீறல் வாகன ஓட்டி தொடர்பாகப் புகைப்படம் அல்லது வீடியோ வாயிலாக பதிவு செய்து அதைப் புகாராக அளித்துவிடுவார்கள். எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்து, உயிரிழப்பை் தடுப்போம். பாதுகாப்புடன் இருப்போம்" என்றனர்.