நாகப்பட்டினம்: திருமருகல் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் 1,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் 1.62 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வளப்பாற்றில் பாசனம் பெறும் திருமருகல் ஒன்றியத்தின் தேவங்குடி, நரிமணம், கோபுராஜபுரம், உத்தமசோழபுரம், பனங்குடி, பூதங்குடி, வல்லபாக்கம், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1,500 ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் நீரால் சூழப்பட்டுள்ளன.
பயிர்கள் 48 மணிநேரம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் வேர்கள் அழுகி பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக நேரடி விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள், இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்ததால் மீண்டும் தற்போது நடவுப் பணி செய்து புதிய நாற்றுகளை நட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அவையும் நீரால் சூழப்பட்டுள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறியது: பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண்மைத் துறையினர் உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆற்றில் இருந்து பொதுப்பணித் துறையினர் மழைக் காலங்களில் தண்ணீர் திறக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். பனங்குடி வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே வரும் காலங்களில் விவசாயத்தை பாதுகாக்க முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் பனங்குடி வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வார உத்தரவிட வேண்டும் என்றனர்.