திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் எளிய பக்தர்களை புறக்கணித்துவிட்டு நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் விஐபிக் களுக்காக பிரத்யேக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (6-ம் தேதி) நடைபெறவுள்ளது. மூலவர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணா மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளன. மகா தீபம் ஏற்றுவதற்கு முன்பாக, தங்கக் கொடி மரம் முன்பு ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கவுள்ளார்.
அர்த்தநாரீஸ்வரர் மற்றும் மகா தீபத்தை தரிசிக்க ஆளுநர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அரசியில் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர் அண்ணாமலையார் கோயிலுக்கு இன்று படையெடுக்கவுள்ளனர். அவர்களை வரவேற்று,
பாதுகாப்பாக அழைத்து சென்று அமர வைத்து, தடையின்றி சுவாமியை தரிசிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் ‘இணைந்த கைகளாக’ கரம் கோர்த்து செய்துள்ளனர். மகா தேரோட்டத்தின்போது மழை பெய்ததால், கார்த்திகை தீபத் திருவிழாவின்போதும் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க வரும் அதிகார மையத்தில் உள்ளவர்கள் மழையில் நனையும் நிலை ஏற்படலாம்.
இதையடுத்து, தங்கக்கொடி மரத்தின் வலதுபுறத்தில் உள்ள கட்டிடத்தின் மீது ‘பிரத்யேக கூடாரம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்தபடி, அர்த்த நாரீஸ்வரர் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்யலாம். எளிய பக்தர்களை ஒட்டுமொத் தமாக புறக்கணித்துவிட்டு, அதிகார மையத்தில் உள்ளவர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவில், பிரத்யேக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கூடாரம் அமைத்தபோது, எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில் கார் பார்க்கிங் பதிவு: திருவண்ணாமலையில் இணையதள சேவை மூலம் கார் பார்க்கிங் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக www.tvmpournami.in என்ற இணைய தள பயன்பாடு மூலம் கார் பார்க்கிங் வசதியை காவல்துறை மற்றும் அருணை பொறியியல் கல்லூரி இணைந்து அறிமுகம் செய்துள்ளன. இணையதளத்தை பயன்படுத்தி கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த 58 இடங்களில் பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டுள்ளன.
இதில் 12 ஆயிரம் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இதர பொது மக்கள் ஆகியோர் நெரிசலை தவிர்க்க பார்க்கிங் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதளம் மூலம் பார்க்கிங் டிக்கெட் பெற்றவர்கள், குறிப்பிட்ட இடத்துக்கு டிசம்பர் 6-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.