கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒட்டப்பட்டது.
தமிழக எல்லையான கூடலூர் பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப்பாறை அருகே கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கூடலூர் அருகே பளியன்குடியில் இருந்து சரிவான மலைப்பாதை வழியே 6.6 கிமீ.தூரம் நடந்து செல்ல வேண்டும். கேரள பகுதியான தேக்கடி, கொக்கரக்கண்டம் வழியே 13 கிமீ.தூரம் ஜீப் மூலமும் செல்லலாம். இக்கோயில் தமிழக எல்லையில் அமைந்திருந்தாலும் கேரளாவில் நடைபெற்று வரும் டிஜிட்டல் ரீசர்வே மூலம் இக்கோயிலை அபகரிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூடுதல் ஆணையர் திருமகள் செயல் அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மங்கலதேவி கண்ணகி கோயில் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதில், தமிழக எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலை இந்து அறநிலையைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என்ற அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கூடலூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அறிவிப்பு பலகையிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பளியங்குடி, தெல்லுகுடி ஆகிய வனப் பாதைகளை அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கம்பம் காசி விஸ்வநாதபெருமாள் கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதில் வனப்பாதை சீரமைப்பு, சர்வே பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வழிபாடு, திருவிழா போன்றவற்றின் போது கேரளாவின் ஆதிக்கம் இக்கோயிலில் இருந்து வருவதால் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் துறை கட்டுப்பாட்டில் செல்வதால் கோயில் வளர்ச்சி பெறுவதுடன் வழிபாடும் மேம்படும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.