புதுச்சேரி: ஜி-20 மாநாடு இந்தியாவில் டெல்லியில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் இரண்டு இடங்களிலும், புதுச்சேரி என நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நடக்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் "மோடி@20 நனவாகும் கனவுகள், அம்பேத்கர் & மோடி" என்ற இரண்டு தமிழாக்க நூல்கள் வெளியிட்டு விழா இன்று காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கலந்து கொண்டு இவ்விரு நூல்களையும் வெளியிட்டார். இதன் முதல் பிரதியை முதல்வர் ரங்ககாமி பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:
“அம்பேத்கர் மிகப்பெரிய உலக தலைவராக விளங்கியவர். அடுத்த மக்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தீண்டாமை என்ற அரக்கனிடம் இருந்து மக்கள் விடுபட மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடம் கூறியிருந்தார். இதனை பிரதமர் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இன்று சுதந்திரம் அடைந்து 76-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். மீன்வளத் துறைக்கு தனியாக அமைச்சகம் வேண்டும் என்பது மீனவ அமைப்புகளின் பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. இதற்கு முன்னாள் இருந்த அரசுகள் இதை செய்யவில்லை. ஆனால், பிரதமர் 2019-ல் மங்களூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி கொடுத்தப்படி, மீனவர்களுக்கு தனித்துறை ஒதுக்கி, கேபினெட் அந்தஸ்துடன் அமைச்சரை நியமித்தார். 2014-ம் ஆண்டு முன்பு வரை மீன்வளத் துறைக்கு ரூ.3 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டு வந்ததது. பிரதமர் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.32,500 கோடியை ஒதுக்கியுள்ளார். கரோனா காலத்தில் கூட மீன்வளத் துறையின் ஏற்றுமதி 32 சதவீதம் உயர்ந்திருந்தது. இதற்கு காரணம் பிரதமர்தான்.தேர்தல் அறிக்கையில் கூறியதை நாங்கள் செய்துவிடுவோம். மற்றவர்கள் போல் செய்யாமல் விட்டதில்லை.
அனைவரும் சேர்ந்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது பிரதமரின் கனவு. இதனை தாரக மந்திரமாக வைத்து பிரதமர் செயல்பட்டு வருகிறார். பிரதமரின் கனவு 2047-ல் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற நாடாகவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைத்த நாடாகவும் இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளோம்.
ஜி-20 மாநாடு வருடம் முழுவதும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு டெல்லியில் மட்டுமில்லை தமிழகத்தில் இரண்டு இடங்களில், புதுச்சேரி, ஜெய்ப்பூர் என நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நடக்கிறது" என்று குறிப்பிட்டார்.
மாநில அந்தஸ்து தருவார் பிரதமர்: விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, "பிரதமர் மோடிக்கு என் மீது பிரியம் உண்டு. அவரை சந்திக்கும்போதெல்லாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர் மாநில அந்தஸ்தை நிச்சயமாக வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.