திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று (5-ம் தேதி) கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளன. 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். பருவத ராஜகுல வம்சத்தினர், மகா தீபத்தை ஏற்றி வைக்க உள்ளனர்.
மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம். இதற்காக 1,100 மீட்டர் காடா துணி மற்றும் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளன. ஐந்து அடி 9 அங்குலம் உயரமும், 300 கிலோ எடையில், செப்பு உள்ளிட்ட உலோகத்தில் செய்யப்பட்டுள்ளது. கொப்பரையில் சிவ சிவ என எழுதியும், நந்தி, சிவலிங்கம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் கிளி கோபுரம் முன்பு கொப்பரைக்கு இன்று (5-ம் தேதி) அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், அண்ணாமலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. கொப்பரையை தோளில் சுமந்து, மலை உச்சிக்கு ஊழியர்கள் கொண்டு சென்று வைத்தனர். இக்கொப்ரையில் நெய் நிரப்பப்பட்டு, ‘திரி’யாக காடா துணியை பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்படும்.