சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘சங்கீத கலாநிதி’ டி.என்.கிருஷ்ணன் நினைவு விருதுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். விருது பெற்ற கலைஞர்களான வயலின் மேதை எம்.சந்திரசேகரன், மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி, வயலின் மேதை என்.ராஜம், இளம் கர்னாடக இசை பாடகர்கள் சிக்கில் குருசரண், அம்ரிதா முரளி ஆகியோருடன் ‘இந்து’ என்.முரளி, நீதியரசர் கே.ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் ஆலப்புழா வெங்கடேசன், பாரதிய வித்யா பவன் இயக்குநர் கே.என்.ராமசாமி உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு 
தமிழகம்

இறை உணர்வோடு ஒன்றவைக்கும் சிறப்பு பெற்றது கர்னாடக இசை: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த வயலின் மேதை டி.என்.கிருஷ்ணன் நினைவு விருதுகளை இசைக் கலைஞர்களுக்கு வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நமது பாரம்பரிய கர்னாடக இசை பொழுதுபோக்குவதற்கானது அல்ல. இறை உணர்வோடு நம்மை ஒன்றவைப்பது. பக்திப்பூர்வமானது என்று தெரிவித்தார்.

பிரபல வயலின் கலைஞர் அமரர் டி.என்.கிருஷ்ணன் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் அவரது பெயரில் நினைவு விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், ‘சங்கீத கலாநிதி’டி.என்.கிருஷ்ணன் படத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். அவர் பேசியதாவது:

சிலரிடம்தான் இசை வசப்படும். அப்படிப்பட்ட அரிய இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன். அவரது பெயரிலான விருதுகளைப் பெறும் மூத்த இசைக் கலைஞர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். விருது பெறும் இளம் கலைஞர்கள் இசைத் துறையில் மென்மேலும் சிறப்புகளை பெறவேண்டும் என வாழ்த்துகிறேன். நமது பாரம்பரிய கர்னாடக இசை வெறுமே பொழுதுபோக்குவதற்கானது அல்ல. இறைஉணர்வோடு நம்மை ஒன்றவைப்பது. பக்திப்பூர்வமானது.

இவ்வாறு ஆளுநர் கூறினார்.

சென்னை மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளி பேசும்போது, ‘‘விருது விழாவை நடத்தும் என்டிரஸ்ட் அறக்கட்டளையை பாராட்டுகிறேன். டி.என்.கிருஷ்ணனின் வயலின் இசை பல தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்திருக்கிறது. அவரது வயலினில்இருந்து புறப்படும் நாதம் அலாதியானது’’ என்று புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில், மூத்த மற்றும் வளரும் இசைக் கலைஞர்களுக்கு டி.என்.கிருஷ்ணன் நினைவு விருதுகளை என்டிரஸ்ட் அறக்கட்டளையின் ஏகத்வம் அமைப்பு வழங்கி கவுரவித்தது.

2021-ம் ஆண்டுக்காக மூத்த மிருதங்க இசைக் கலைஞர் பத்மஸ்ரீ டி.கே.மூர்த்திக்கு டி.என்.கிருஷ்ணன் நினைவு விருது, மூத்த வயலின் கலைஞர் பத்மபூஷன் டாக்டர் என்.ராஜம்-க்கு டி.என்.கிருஷ்ணன் சிறப்பு சாதனையாளர் விருது, சிக்கில் குருசரணுக்கு இளம் கலைஞருக்கான விருது வழங்கப்பட்டது.

2022-ம் ஆண்டுக்காக வயலின் மேதை சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனுக்கு டி.என்.கிருஷ்ணன் நினைவு விருதும், கர்னாடக இசைப் பாடகி அம்ரிதா முரளிக்கு இளம் கலைஞருக்கான விருதும் வழங்கப்பட்டன.

நீதியரசர் கே.ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் ஆலப்புழா வெங்கடேசன், பாரதிய வித்யா பவன் இயக்குநர் கே.என்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து விஜி கிருஷ்ணன், ஸ்ரீராம் கிருஷ்ணனின் வயலின்இசை நிகழ்ச்சி, திருவாரூர் பக்தவத்சலம் (மிருதங்கம்), வைக்கம் கோபாலகிருஷ்ணன் (கடம்) பக்கவாத்தியத்துடன் நடந்தது.

SCROLL FOR NEXT