தமிழகத்தில் பொது விநியோக முறையை சீர்குலைத்து அழிக்க சதி நடக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு நேற்று வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது விநியோகம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கூடாது என்று, உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், குடும்ப அட்டைகளில் 3 வயதுக்கு மேற்பட்டோரின் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும் என அரசு கட்டாயப்படுத்துகிறது.
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் தமிழகம் இணைக்கப்பட்டிருக்கிறது. தற்போது, குடும்ப அட்டைகளில் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்ட நிலையில், தகுதியுடையோர் பற்றிய பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன்மூலமாக, தமிழகத்தில் இலவசமாக அரிசி வழங்கும் பொது விநியோக முறையை சீர்குலைத்து அழிப்பதற்கு சதி நடக்கிறது.
சட்டம் - ஒழுங்கு உட்பட பல்வேறு பிரச்சினைகள் தேங்கிக் கிடக்கின்றன. உடல்நலக் குறைவால், முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர்கள், அரசு நிர்வாகம், அதிகார வர்க்கம் ஒன்றும் செய்வதில்லை. தமிழகத்தில் அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.
ரூ.500, 1000 நோட்டுகள் மதிப்பு நீக்கம் என்ற மோடி அரசின் அறிவிப்பு, சாமானியர்களின் துயரத்தை அதிகரித்துள்ளது. திருப்பூர் போன்ற சிறு தொழிலை நம்பிப் பிழைக்கும் மாவட்டத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கின்றனர்.
மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை திசை திருப்பவே, ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இது அரசியல் நாடகம். திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, குறைந்தபட்சம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் அந்தந்த பயிர்களின் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். நூல் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக விசைத்தறித் தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில், சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.