தமிழகம்

தொட்டில் இறுகி இறந்த சிறுமியின் கண்களால் இருவர் பார்வை பெற்றனர்

செய்திப்பிரிவு

தருமபுரியில் தொட்டிலில் விளையாடியபோது திடீரென கழுத்து இறுகியதில் சிறுமி ஒருவர் இறந்தார். சோகத்திலும் அந்த சிறுமியின் தாயார் தன் மகளின் கண்களை தானம் கொடுத்துள்ளார்.

தருமபுரி வி.ஜெட்டிஅள்ளி அடுத்த இளங்கோ நகரைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி குமார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். இவரது மனைவி வேடியம்மாள். இவர்களது குழந்தைகள் மதுமிதா (14), மகாலட்சுமி (8), சக்திவேல் (4). கணவரின் மறைவுக்குப் பிறகு, வேடியம்மாள் சில வீடுகளில் வேலைகள் செய்துகொடுத்து குழந்தைகளை காப்பாற்றினார். வி.ஜெட்டிஅள்ளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மகாலட்சுமி.

செவ்வாய் கிழமை மாலை பள்ளி முடித்து வீடுதிரும்பியவுடன், சிறுவன் சக்திவேலுவுக்காக வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் ஏறி விளையாடியாடியபோது, தொட்டில் துணி சிறுமியின் கழுத்தை இறுக்கியுள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. தொட்டிலிலேயே சிறுமியின் மூச்சு அடங்கியது. சற்று நேரத்துக்குப் பிறகு வீடு திரும்பிய வேடியம்மாள் மகளின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறினர்.

கடந்த ஓராண்டுக்குள் கணவர், மாமனார் என இருவரையும் பறிகொடுத்த சோகமே நீங்காத நிலையில் தன் மகளையும் இழந்த துக்கம் வேடியம்மாளை நிலைகுலையச் செய்தது. அந்த சூழலிலும், மற்றவர்கள் யோசிக்கத் தயங்கும் முடிவை அந்த ஏழைத்தாய் வேடியம்மாள் எடுத்தார்.

அதாவது, தன் மகளின் கண்களை தானம் செய்ய விரும்புவதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார். உடனே தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ‘தருமபுரி கண் தான மையம்’ அமைப்பின் செயலாளர் மருத்துவர் பாரிகுமார் ஆகியோர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

செவ்வாய் இரவு 10.30 மணியளவில் சிறுமியின் கண் கள் அகற்றப்பட்டு மருத்துவ பாதுகாப்புடன் பெங்களூர் எடுத்துச் செல்ல தயாரானது. அகற்றப்பட்டதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் கண்களை மற்றவர்களுக்கு பொருத்தினால் தான் பலன் தரும். எனவே விரைவாக பெங்களூர் எடுத்துச் செல்லபட்ட மகாலட்சுமியின் கண்கள், பார்வையற்ற இருவருக்கு நேற்று பொருத்தப்பட்டது. சோகத்தை மனதோடு மறைத்துக் கொண்டு மகளின் கண்களை தானம் செய்ய முன்வந்த வேடியம்மாளை மருத்துவ துறையினரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.

SCROLL FOR NEXT