தூத்துக்குடி: ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கோருவது சரியானது அல்ல என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதற்காக முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. வரும் 9-ம் தேதி அனைத்து ஆளுநர்கள், முதல்வர்களை காணொளி மூலமும் தொடர்பு கொண்டு பிரதமர் பேசவுள்ளார். உலகத்தின் குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்று விவேகானந்தர் நினைத்தார். அந்த முன்னேற்றப் பாதையில் பாரதம் சென்று கொண்டிருக்கிறது.
சீனாவில் இன்னும் கரோனா பாதிப்பு உள்ளது. அங்கு கதவடைப்பு நடக்கிறது. ஆனால் நாம்கரோனாவில் இருந்து தப்பித்துள்ளோம் என்றால், அதற்கு தடுப்பூசிதான் காரணம். விஞ்ஞானிகளை ஊக்குவித்து, தடுப்பூசியை ஏற்பாடு செய்த பிரதமர், அதனை முன்னெடுத்துச் சென்ற மாநில அரசுகள், அதனை ஏற்றுக்கொண்ட மக்களால் இது சாத்தியமாயிற்று.
தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி தொடர்பாக அமைச்சரை அழைத்து சில சந்தேகங்களை ஆளுநர் கேட்டுள்ளார். விளக்கம் கிடைத்தபிறகு அவர் நடவடிக்கை எடுக்கலாம்.
மசோதா வந்த உடன் உடனடியாக கையெழுத்திட வேண்டும்என்ற அவசியம் ஆளுநருக்கு கிடையாது. அந்த மசோதா மக்களுக்கு பயன் தருமா என்ற சந்தேகம் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனை பெறுவதற்கு நேரம்எடுத்துக் கொள்ளலாம். இது காலதாமதப்படுத்துவது கிடையாது.
வழிமுறைகள் அவசியம்: ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். ஜனநாயக நாட்டில் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து தென்காசி சென்றஅவர், பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.