பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கோவை | ஹெல்மெட் அணியாமல் சென்றபோது விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: விதிமீறலால் இழப்பீடு பாதியாக குறைப்பு

செய்திப்பிரிவு

கோவை: ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்றபோது விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை பாதியாக குறைத்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை வெள்ளமடையைச் சேர்ந்த தம்பதியான மகேந்திரன், தமிழ்செல்வி ஆகியோர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் மகன் ரமேஷ், தான் வாங்கிய இருசக்கர வாகனத்துக்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.7,882 செலுத்தி முழு காப்பீடு செய்திருந்தார். கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி, தனது நண்பர்கள் செல்வகுமார், புவனேஷ்வரன் ஆகியோரை வாகனத்தில் அமர்த்தி கோவில்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில், ரமேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக பெரிய நாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரமேஷின் உயிரிழப்பு குறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் மனு அளித்தோம். அவர்கள் இருசக்கர வாகனத்தில் இருவர்தான் செல்ல வேண்டும். மூன்று பேர் சென்றதால் காப்பீடு மறுக்கப்படுவதாக தெரிவித்தனர். விபத்து எதிர்பாராமல் நடந்ததாகும். எனவே, தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையைான ரூ.15 லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

காவல்துறை அறிக்கையின்படி, இருசக்கர வாகத்தில் மூன்றுபேர் தலைக்கவசம் இன்றியும், வாகனத்தை ரமேஷ் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டிச்சென்ற நிலையில், தனக்குத்தானே விபத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக புகாரில் சொல்வதற்கு தகுந்த விளக்கமில்லை. அதிவேகமாக, தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிச் செல்வது மோட்டார் வாகன சட்டம், காப்பீட்டு சட்ட விதிமுறைகளுக்கும், காப்பீட்டு ஒப்பந்தத்துக்கும் முரணானது.

உச்ச நீதிமன்றம் இதேபோன்ற வேறொரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில், மூன்று நபர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்து ஏற்பட்டால் காப்பீட்டு தொகையில் அதிகபட்சம் 75 சதவீதம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இரண்டு விதிமீறல் என்பதால் காப்பீட்டு தொகையில் 50 சதவீதம் மனுதாரர்களுக்கு கிடைக்கத்தக்கது. அதன்படி, ரூ.7.50 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் மனுதாரர்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT