தமிழகம்

மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

செய்திப்பிரிவு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்ததால் வீடுகள், குடிசைகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

மின்சார கட்டமைப்பு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரத்துக்கு அதிகமான மின் கம்பங்களும், 250-க்கும் அதிகமான மின் மாற்றிகளும், 30-க்கும் அதிகமான மின் தொடரமைப்பு கோபுரங்களும் மண்ணில் சாய்ந்து கிடக்கின்றன.

20 பணியாளர்கள் 5 நாள்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் தான் ஒரு மின் தொடரமைப்பு கோபுரத்தை சரி செய்ய முடியும். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீர், பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில்கள் முழுவதுமாக முடங்கியுள்ளன.

ஏற்கெனவே, பண மதிப்பு நீக்கத்தால் வங்கி சேவை முடங்கியுள்ளதால் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின்சாரக் கட்டமைப்பை முழுமையாக சீரமைப்பதில் மாநில அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. கூடுதலாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் தொடர்ச்சியாக பணி செய்தால் மட்டுமே ஒரு வாரத்துக்குள் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும். எனவே, மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1,000 கோடி தேவை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்று உடனடியாக மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மீட்பு, நிவாரணப் பணிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இறங்கியுள்ளனர், கட்சியின் ஊழியர்களும், பொதுமக்களும் முழுமையாக மீட்புப் பணியில் இறங்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT