தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 6 அடுக்கு அதிநவீன பார்க்கிங் பயன்பாட்டுக்கு வந்தது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிநவீன 6 அடுக்கு மல்டிலெவல் வாகன பார்க்கிங் நேற்று அதிகாலைமுதல் பயன்பாட்டுக்கு வந்தது.

சென்னை விமான நிலையத்தில் புதிதாக 6 அடுக்கு மல்டி லெவல் வாகன பார்க்கிங் ரூ.250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகன பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400 பைக்குகளை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இந்த வாகன பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்துக்கு வரும்வாகனங்களையும், மேற்கு பகுதியில் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களையும் நிறுத்த வேண்டும்.

அதிநவீன முறையில் இந்த பார்க்கிங் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களையும் இங்கு நிறுத்தலாம். மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக 5 பாயின்டுகள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு காரணங்களால் புதிய வாகன பார்க்கிங் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், நேற்று (டிச. 4) அதிகாலையிலிருந்து இந்த வாகன பார்க்கிங் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த வாகன பார்கிங் செயல்படுத்தும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பழைய வாகன நிறுத்தத்தில்ரூ.20-ல் இருந்து ரூ.300 வரைஇருந்த கட்டணம், புதிய பார்க்கிங்கில் ரூ.30-ல் இருந்து ரூ.600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய டோக்கன் முறையால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன. இதனால் கார்களில் வந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமானிகள், பயணிகள் ஆகியோரின் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் விமானத்துக்குச் செல்ல தாமதம் ஏற்படும் நிலை உருவானது. புதிய பார்க்கிங்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென பயணிகள்,வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, புதிய வாகன பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்தாலும், ஏற்கெனவே பயணிகளை ஏற்றி இறக்கி வரும் வாகனங்களுக்கு 10 நிமிடங்கள் இலவச நேரம் உள்ளது.சென்னை விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக சொந்த வாகனங்களில் வருபவர்கள் விமான நிலைய போர்டிகோவரையில், அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நிலை தொடரும்.

வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு பயணிகள் உள்நாட்டு முனையம், சர்வதேச முனையத்துக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலம் வழியாக நடந்து செல்லலாம். அந்த நடைமேம்பாலம் சர்வதேச, உள்நாட்டு முனையங்களை இணைக்கும்விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT