அரூர்: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேறும். இதற்கு பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 450 டிஎம்சி நீர் உபரியாக செல்கிறது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேவை. நீர் மேலாண்மையை நிறைவேற்ற 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தருமபுரியில் சிப்காட் தொடங்கி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் என தெரிவித்தனர்.
ஆனால், அரசு செயல்படுத்தவில்லை. மாறாக சட்ட விரோதமாக மதுக்கடைகள் நடத்துபவர்களை ஊக்குவித்து வருகிறது. இதேபோல, தமிழகத்தில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை சட்டமாக இயற்றவில்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு, அடுத்த கல்வி ஆண்டுக்குள் சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்படும் என நம்புகிறோம்.
வரும் 2026-ம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 மக்களவைத் தேர்தலில் அமைப்போம். மக்களவைத் தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு எங்கள் முடிவை அறிவிப்போம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த, ‘பாபா’ திரைப்படம் மீண்டும் வெளியாகிறது.
ரஜினிகாந்த் சமுதாய பொறுப்புள்ள கடமை உணர்வு உள்ளவர். அப்படத்தில் மது மற்றும் புகைப்பிடிப்பது உள்ளிட்ட காட்சிகள் எது வேண்டும், எது தவிர்க்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.