புதுக்கோட்டை: ஒன்றிணையாவிட்டால் பழனிசாமி தனித்து விடப்படுவார் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவதாகத் தெரியவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற வி.கே.சசிகலா, டிடிவி.தினகரன், பழனிசாமி உட்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஒன்றிணைய மாட்டோம் என பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். ஒன்றிணையாவிட்டால், அவர் தனித்து விடப்படுவார்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். திமுக எங்களை இயக்கவில்லை. நாங்கள் அதற்கு ஆட்படவும் மாட்டோம். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அதிமுக இருக்கும். 40 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும்.
அதிமுக பொதுக் குழு வெகுவிரைவில் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவித்தார்.