தமிழகம்

54 தற்காலிக இடங்களில் மரக் கழிவுகளைக் கொட்டலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் 'வார்தா' புயலால் உருவான மரக் கழிவுகளைக் கொட்ட 54 தற்காலிக இடங்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அங்கு, தனியார் தங்கள் பகுதியில் உள்ள மரக்கழிவுகளைக் கொட்டலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், '''வார்தா' புயலால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் விழுந்த, சேதமடைந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அகற்றப்படும் மரக் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வதால் காலவிரயம் ஏற்படுகிறது. அதை தவிர்க்கவும், விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 54 காலி இடங்கள் அடையாளம் காணப்பட்டு, பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் மரக்கழிவுகள் தற்காலிகமாக அங்கு கொட்டப்பட்டு வருகிறது.

எல்லா இடங்களிலும் மரக்கழிவுகள் அகற்றப்பட்ட பின், தற்காலிக இடங்களில் கொட்டப்பட்ட மரக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ள கழிவுகள் கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும் குடியிருப்பு, வணிக வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு, ஏற்கெனவே அகற்றப்பட்ட சாலைகளில் கொட்டப்படுவதால், மாநகராட்சிக்கு சிரமங்கள் ஏற்படுகிறது. அதனால் தனியார் தங்களது வளாகங்களில் விழுந்த மரங்களை, மாநகராட்சி அடையாளம் கண்டுள்ள 54 தற்காலிக இடங்களில் கொட்டலாம்.

இது தொடர்பாக விவரங்கள் அறிய மாநகராட்சியின் இலவச புகார் எண் 1913 மற்றும் 044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT