கல்பாக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்ற அவசரநிலை பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், புதியதாக கட்டப்பட்டுள்ள அதிவேக ஈனுலை,பாபா அணு ஆராய்ச்சி மையம்போன்ற பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏதேனும் அணுக்கசிவு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதிலிருந்து மக்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த பயிற்சி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
அவசரநிலை ஒத்திகையை முன்னிட்டு மாவட்ட அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இதுகுறித்த பயிற்சி முகாமை கல்பாக்கம் நகரிய குடியிருப்பில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் செங்கை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை அணுமின் நிலைய இயக்குநர் ஸ்ரீ சுதிர்பி.ஷெல்கே, அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் பேரிடர் மேலாண்மை மீட்பு குழு கமாண்டண்ட் அருண் மற்றும் கல்பாக்கம் அணுசக்தி துறையின் உயரதிகாரிகள், தமிழ்நாடு தீயணைப்பு துறையினர், மருத்துவத் துறையினர், வருவாய்த் துறையினர் எனஏராளமானோர் கலந்து கொண்டனர். அணுக்கசிவு ஏற்பட்டால் முதற்கட்டமாக எப்படி மீட்பது குறித்து ஒத்திகை, இவர்களுக்கு அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவினரால் செய்து காட்டப்பட்டது.