காஞ்சிபுரம்: ரேஷன் அட்டையுடன் வங்கிக் கணக்கை குடும்ப அட்டைதாரர்கள் இணைக்காவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் 62 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.22.80 லட்சம் கடன் உதவித் தொகை வழங்கி, ரேஷன் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2 ஆயிரம் ரேஷன் கடைகளின் சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவு ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 2,491 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் படிப்படியாக புதுப்பிக்கப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 14.86 லட்சம் பேர் மட்டுமே வங்கிக் எண்ணை இணைத்துள்ளனர். மற்றவர்களும் வங்கி எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும். அதேநேரம் அட்டைதாரர்களை இணைக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. வங்கிக் கணக்கை இணைக்காவிட்டாலும் பொருட்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது.எந்த ஒரு பொருளையும் பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்குவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 11.07 லட்சம் பேருக்கு ரூ.8,616 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2.16 லட்சம் பேருக்கு ரூ.1,453 கோடி அளவில் விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 22,416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.739 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரிசி கடத்தல் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 11,545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,628 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 132 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மு.முருகன், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் பா.ஜெய, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் ஆ.முருகானந்தம், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.