வார்தா புயல் பாதிப்பைத் தொடர்ந்து திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங் களில் தீவிரமாக நடைபெற்று வரும் மீட்புப் பணி நடவடிக்கைகளை அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதிகளில் வார்தா புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பழவேற்காடு உள்ளடங்கிய பொன்னேரி பகுதிகளில், நிவாரண பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. சிறப்பு மருத்துவ முகாம்கள், உணவு பொருட்கள் வழங்குதல், தொற்று நோய் தடுப்பு மற்றும் மின்பாதை சீரமைப்பு ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
அந்த பணிகளை, அமைச்சர்கள் எஸ்.பி.,வேலுமணி, கே.பி.அன்பழகன், வெல்ல மண்டி நடராஜன், விஜயபாஸ்கர், காமராஜ், பாண்டியராஜன் ஆகிய 6 அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நிவாரண பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில். செல்லூர் கே.ராஜு , வி.சரோஜா, ஓ.எஸ்.மணியன், துரைக் கண்ணு, ராஜேந்திர பாலாஜி ஆகிய 5 அமைச் சர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், 5 அமைச்சர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
மாவட்டத்தில் ஆயிரத்து 714.07 ஹெக்டேர் விவசாய பயிர்களும், 324.03 ஹெக்டேர் தோட்டப் பயிர்களும், 295 கட்டிடங்களும் சேதமடைந்ததாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரத்து 125 மரங்கள் சாய்ந்ததோடு, 8,330 மின் கம்பங்கள், 130 மின் மாற்றிகள், 27 உயர் அழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தமாக ரூ.153 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் கூறும்போது, ‘‘மின் இணைப்பு துண்டிப்பு பெரிய பிரச்சினையாக உள்ளது. நகரங்களில் 80 சதவீதம், பேரூராட்சிகளில் 60 சதவீதம், ஊராட்சிகளில் 40 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
2,337 பணியாளர்கள், 799 வெளி மாவட்ட பணியாளர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 700 பணியாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து நாளை வர உள்ளனர். இதுபோக, 2 ஆயிரம் வெளி மாநில பணியாளர்களும் வர உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.