சென்னை உயர்நீதிமன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

வனத்துறை நிலத்தை பினாமிகள் மூலம் அதிகாரி அபகரித்ததாக வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அரசு உயர் அதிகாரி ஒருவர் பினாமிகள் மூலமாக அபகரித்த விவகாரம் குறித்து கூடுதல் செயலாளர் தலைமையில் விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூலாத்தூர் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை, தமிழக முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக உள்ள அம்பலவாணன் என்பவருக்கு பினாமிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி பூலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "கடந்த 2010-2013ம் ஆண்டுகளில் நடந்த இந்த பரிவர்த்தனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அபோதைய மாவட்ட ஆட்சியர், அப்போதைய தாசில்தாரர் என்று ஐஏஎஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் 35 பேர் வரை கூட்டு சேர்ந்து எனக்கு எதிராக 11 பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எனது குடும்பத்தினரையும் துன்புறுத்துகின்றனர்.

ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்த சிபிசிஐடி விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த முறைகேடு தொடர்பாக கூடுதல் செயலாளர் அந்தஸ்து அதிகாரியை நியமித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், லஞ்ச ஒழிப்பு ஆணையர் , உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT