வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் திடீர் சமரச முயற்சி எடுக்கப்பட்டிருப்பதற்கான மர்மம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில்: "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய உடன்பிறவாச் சகோதரி சசிகலா மீதும், வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு பதினெட்டு ஆண்டுகளாக நீடித்து, தற்போது முடிவுக்கு வருகின்ற நேரத்தில், நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று கடுமையாக நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், தாங்கள் துறைவாரியாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு ஒன்றினை துறையிடம் தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனு நிலுவையிலே இருப்பதாகவும் தெரிவித்து, அதற்கு வருமான வரித் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆட்சேபணை தெரிவிக்காததால், நீதிபதி விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது பற்றி விரிவாக நான் 3-7-2014 அன்று தெரிவித்திருந்தேன்.
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக நிலுவையிலே உள்ளது.
18 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று - அதற்காக நீதிமன்றங்களும், அரசும், வழக்கறிஞர்களும் பல மணி நேரம் செலவிட்ட பிறகு, தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவினை ஜெயலலிதா தரப்பினர் 18 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து, அப்போது துறை மூலமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லையா? இந்த வழக்குக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று, உச்ச நீதிமன்றத்தின் பொன்னான நேரம் செலவழிக்கப் பட்டதே, அப்போதே துறையின் வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் கூறியிருக்கலாம் அல்லவா?
துறைவாரியாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் ஏற்கனவே துறையினரிடம் மனுக் கொடுத்தார்களா? அப்படிக் கொடுத்திருந்தால் அந்த மனுவின் கதி என்ன? அப்போது என்ன முடிவெடுக்கப்பட்டது?
இந்தப் பிரச்சினை தொடர்பாக தே.மு.தி.க. தலைவர், விஜயகாந்த் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் எழுதிய கடிதத்தில், இந்த வழக்கு நடைபெறும் 18 ஆண்டுகளில், நீதிபதி பலமுறை உத்தரவிட்டும், ஒரு முறை கூட ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை என்றும், 30-6-2014 அன்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் சராசரி இந்தியக் குடிமகன் இதுபோன்று செயல்பட்டிருக்க முடியுமா என்றும், அதற்கு சட்டமும் நீதிமன்றமும் இடம் கொடுக்குமா என்றும், இந்த நிலையில் ஜெயலலிதா வருமான வரித் துறையின் இயக்குனர் ஜெனரலிடம் கம்பவுண்டிங் முறையில் வருமான வரி பாக்கியைச் செலுத்தி சமரசமாக தீர்த்துக் கொள்ளத் தயார் என்று அறிவித்திருப்பது சரிதானா என்றும், ஜெயலலிதாவின் வேண்டுகோளை வருமான வரித் துறை ஏற்றுக் கொள்ளுமேயானால், பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஜெயலலிதா மீது நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கை அது திசை திருப்பிவிடும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள் என்றும், அதைக் கருத்திலே கொண்டு வருமான வரித் துறை ஜெயலலிதாவின் சமரசம் பற்றி முடிவெடுக்க வேண்டுமென்று தே.மு.தி.க. தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி யிருக்கிறார். இந்தக் கடிதமும், அதன் கருத்துகளும் பிரதமர் மோடி அரசினால் அலட்சியப்படுத்தப்பட்டு விடக் கூடாது.
வருமான வரித் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமசாமி இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது, தான் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதனால் வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்துள்ளார் என்று தெரிவித்திருக்கிறாரே, துறை வாயிலாக அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டா மென்று அறிவுரை வழங்கப்பட்டதா?
ஜெயலலிதாவும், சசிகலாவும் தங்களை இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரி மனுக்களைத் தாக்கல் செய்து விட்டு, அதனை நடத்தாமல் காலம் கடத்தியதைத் தொடர்ந்து, வருமான வரித் துறை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 4-9-2006 அன்று உச்ச நீதிமன்றம் நான்கு வாரக் காலத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களை விடுவிக்க வேண்டுமென்று தொடுத்த வழக்கை முடிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.
அவ்வாறே முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் அவர்கள் விசாரித்து ஜெயலலிதாவின் மனுவினைத் தள்ளுபடி செய்தார். அதாவது 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு தங்களை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டு மென்று குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் மனுத் தாக்கல் செய்து, அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதே, அப்போதே ஜெயலலிதா தரப்பினர் இந்தப் பிரச்சினையை துறை வாயிலாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கலாம் அல்லவா? அப்போது மத்திய அரசில் தங்கள் கோரிக்கையைக் கேட்கின்ற அரசு இல்லை என்ற காரணத்தால் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லையா?
எழும்பூர் மாஜிஸ்திரேட்; ஜெயலலிதா தரப்பினரின் விடுவிப்பு மனுவினை தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண்டனர். அந்த மேல் முறையீட்டு மனுவும் 2-12-2006 அன்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண் டார்கள். அந்த மேல் முறையீட்டினை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் குறுக்கிடுவதற்கு எந்தவிதமான அடிப்படையான காரணமும் இல்லை; மேல் முறையீட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு அந்த வழக்கில் எந்தவிதமான நியாயமும் இல்லை"என்று தெரிவித்ததோடு, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கினை நான்கு மாத காலத்திற் குள் விசாரணை செய்து முடிக்குமாறு 30-1-2014 அன்று தீர்ப்பளித்தது. அந்த நேரத்திலாவது தாங்கள் இப்பிரச்சினையை துறைவாயிலாகத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் சொன்னார்களா என்றால் இல்லை.
உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பில், "குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எத்தகைய சூழலில் தாங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்"" என்று குறிப்பிட்டிருப் பதில் இருந்து, இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக் கும்தான் உள்ளது என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.
இதே வருமான வரித் துறை பற்றிய வழக்கு ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றத்தில்
24-2-2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் அப்போது ஆறு வாரம் அவகாசம் வேண்டுமென்றார்.
அப்போது நீதிபதிகள் "நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்?" என்றெல்லாம் கேட்டார்களே, அப்போதாவது நாங்கள் துறை வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? அல்லது துறையிடம் ஏற்கனவே முறையிட்டு, அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து விட்டார்களா?
ஏனென்றால் ஏற்கனவே யஷ்வந்த் சின்கா அவர்கள் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதே, அவரை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்து வருமான வரி வழக்கு பற்றிய பரிந்துரையை ஜெயலலிதா கொடுத்தார் என்று அவரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டதையும் மறந்து விடுவதற்கில்லை.
இதுபோலத்தான் "வோடபோன்" நிறுவனத்துக்கு கடந்த கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வருமான வரிச் சட்டத்தில் சலுகை அளித்து, சமரச முடிவு காண முற்பட்ட போது, அதை எதிர்த்து முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஸ்வாஜித் பட்டாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் என்பதும் மனதிலே கொள்ளத்தக்கது.
கடந்த 18 ஆண்டுக் காலமாக இந்த வழக்கை இழுத்தடித்து, வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி, நீதிமன்றங்களின் பொன்னான நேரத்தையெல்லாம் வீணடித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, கேலிக் கூத்தாக்கி இருக்கிறார்கள். மத்திய அரசும், பிரதமரும், குறிப்பாக வருமான வரித் துறையும் எச்சரிக்கையோடு இந்தப் பிரச்சினையிலே இருக்க வேண்டும்.
ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, வருமான வரித் துறை, இந்த வழக்கில் பல ஆண்டுகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிவிட்டு, தற்போது கம்பவுண்டிங் முறையில் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முன்வருமேயானால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து, இதுபோன்ற தவறுகளைச் செய்வோரை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்பதை சம்பந்தப்பட்டோர் நினைவிலே கொண்டு, மத்திய அரசும், வருமான வரித்துறையும் இந்தப் பிரச்சினையை அணுகிட வேண்டும்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.