கிருஷ்ணமூர்த்தி, விமலா. 
தமிழகம்

உயர் நீதிமன்ற உத்தரவை திருத்தியதாக திமுகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் கணவருடன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவைத் திருத்தியதாக திமுக பெண் கவுன்சிலர் கணவருடன் கைது செய்யப்பட்டார். சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த தொழில் அதிபர் அமர்ராம் (53). இவர் மெரினா காவல் நிலையத்தில் 2 மாதங்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘சொந்தமாக அடகுக் கடை வைத்துள்ளேன்.

சென்னையை அடுத்த நாவலூரில் 58 சென்ட் நிலத்தை திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து வாங்கினேன். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி என்பதால், அதைத் திரும்பக் கேட்டு கிருஷ்ணமூர்த்தி மிரட்டி வந்தார்.

மேலும் இந்த நிலம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியின் தம்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பாகப் பேச வேண்டும் என்று என்னை மெரினா கடற்கரைக்கு அழைத்தார். நானும் கலங்கரை விளக்கம் அருகே சென்றேன். அப்போது கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் சிலர் என்னைக் கத்திமுனையில் மிரட்டி காரில் கடத்தினர்.

பின்னர், திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, ஏற்கெனவே என்னிடம் விற்ற நிலத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் எழுதி வாங்கிக் கொண்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ரூ.25 கோடி மதிப்புடைய எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி திமுகவைச் சேர்ந்த 124 வார்டு கவுன்சிலர் விமலா உள்ளிட்ட 10 பேர் மீது மெரினா போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அந்த முன்ஜாமீன் உத்தரவு நகலுடன், சென்னை எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் நேற்று விமலா, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர். அந்த முன்ஜாமீன் உத்தரவு காலாவதி ஆகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில் அதை மறைத்து, முன்ஜாமீன் உத்தரவு நகலில் சில திருத்தங்களைச் செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை மாஜிஸ்திரேட்டு கண்டுபிடித்துவிட்டதாக தெரிகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவு நகலில் திருத்தம் செய்த குற்றச்சாட்டு அடிப்படையில், கவுன்சிலர் விமலா, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் எழும்பூர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், தொடர்புடையதாக மேலும் 3 வழக்கறிஞர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT