நாட்டின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு, நூற்பாலைகள், பொறியியல் நிறுவனங்கள், வார்ப்படத் தொழிற்சாலைகள், வேளாண் கருவிகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், மோட்டார் பம்புகள், வாகன உதிரிப் பாகங்கள், தங்க, வைர நகைப் பட்டறைகள், காற்றாலைக்கான பாகங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வெளியூரைச் சேர்ந்தவர்கள் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை யைத் தொடர்ந்து வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் இருப்பு இல்லாததால் மக்கள் திண்டாடுகின்றனர். தொழில் துறையினருக்கு இதில் பாதிப்பு அதிகம். பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளம் வழங்க முடியாமலும், மூலப் பொருட்கள், உதிரிப் பாகங்கள் வாங்க முடியாமலும் தொழில் துறையினர் திணறுகின்றனர். இதனால், தொழில் துறை நிலைகுலைந்துள்ளது.
சம்பளம் வழங்க முடியவில்லை
இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் டி.நந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியது: வழக்கமாக 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தொழி லாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க அறி விப்பு வெளியானதால், பெரும்பாலான நிறுவனங்கள் நிலைமையைச் சமாளித்துவிட்டன. ஆனால், இந்த மாதம் தொழில் நிறுவனங்களால் சமாளிக்க முடிய வில்லை. பெரும்பாலான தொழி லாளர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க முடியவில்லை. சில நிறு வனங்களில் தொழிலாளர்களுக்கு கொஞ்சம்கூட சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்றார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர் வி.சுந்தரம் கூறும்போது, “கறுப்புப் பணத்தை ஒழிப்பது, லஞ்சம், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவது என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு நீக்கத் திட்டத்தை வரவேற்கிறோம். இதற்காக பல்வேறு சிரமங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டுள்ளோம்.
ஆனால், அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்தைக் கடந்த நிலையிலும், பணத் தட்டுப்பாட்டால் அனைத்துத் தரப்பினரும் பரிதவிக்கின்றனர். தொழில் துறை ஸ்தம்பித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாவட்ட, பிற மாநில தொழிலாளர்கள், சம்பளம் கிடைக்காததால், சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 50 சதவீத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தொழில் துறைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அரசுக்கும் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்டர் இருந்தும் உற்பத்தி இல்லை
பல நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் இருந்தாலும், உற்பத்திப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லாததால், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊர் திரும்பும் தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வருவது சிரமம். எனவே, இந்த நிலை நீடித்தால் தொழில் துறை நிலைமை இன்னும் மோசமாகும்.
எனவே, வங்கிகளில் பணம் எடுக் கும் அளவை ரூ.2 லட்சமாக உயர்த் தவும், ஏடிஎம்களில் ரூ.500 நோட்டு கள் தாராளமாகக் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களிடம் பல்வேறு ஆவணங்கள் இல்லாததால், உடனடியாக வங்கிக் கணக்கைத் தொடங்க முடியவில்லை. எனவே, நடைமுறைகளை எளிமைப்படுத்துவதுடன், போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் மனு வழங்கியுள்ளோம்” என்றார்.
இந்தப் பிரச்சினையில் காலம்கடத்தாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில் துறையினர் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.