முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று ஜெயலலிதாவின் மறைவு குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், "தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பாகும்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரை இழந்து தவிக்கக்கூடிய அதிமுக-வின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.