மதுரை: பசுவின் வயிற்றிலிருந்து 65 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வெற்றிகரமாக அகற்றி அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் மதுரையைச் சேர்ந்த கால்நடை அரசு மருத்துவர்கள்.
மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் பசு மாடுகள் வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த மாடுகளில் ஒன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கன்று ஈன்றிருந்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பசுவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உணவு ஏதும் உட்கொள்ளாமல் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டது.
நோயுற்ற அந்தப் பசுவை மகேஸ்வரன் மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பசு மாட்டை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் வயிற்றில் பல்வேறு கழிவுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.
மதுரை மண்டல இணை இயக்குநர் டாக்டர் நடராஜகுமார் ஆலோசனையின் பேரில் பன்முக மருத்துமனையில் பசு அனுமதிக்கப்பட்டு நவ.22-ம் தேதி பிரதம மருத்துவர் வைரவ சாமி தலைமையில் கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராம், விஜயகுமார், முத்துராமன், அறிவழகன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளடக்கிய மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சை மேற்கொண்டனர்.
இதில், பசுவின் வயிற்றில் இருந்த சுமார் 65 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி அதன் உயிரைக் காப்பாற்றினர். பசுவுக்கு சிகிச்சைமேற்கொண்ட மருத்துவர்களை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் பாராட்டினார். சிகிச்சைக்குப் பின் தற்போது மாடு நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.