தமிழகம்

பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு விதிகளை மேற்கொள்ள வேண்டும்: வாசன்

செய்திப்பிரிவு

பட்டாசு ஆலைகளில் விபத்து நடக்காமல் இருப்பதற்கு உரிய பாதுகாப்பு விதிகளை அரசு கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுங்கரகோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். இது மிகவும் வேதனைக்குரியது. தமிழக அரசு, படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்கை அளிக்க வேண்டும். உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்ற தீ விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்ததில் பல பேர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பட்டாசு ஆலைக்கு அரசு அனுமதி அளிக்கும் போது முறையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களை தமிழக அரசு சரிபார்த்ததா? பட்டாசு ஆலை நிர்வாகம் அவைகளை முறையாக கையாளுகின்றதா? என்பதை தமிழக அரசு கண்காணித்ததா? என்பதை விளக்க வேண்டும்.

மேலும் இதுபோல் விபத்து நடக்காமல் இருப்பதற்கு உரிய பாதுகாப்பு விதிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT