வேலூர்: வேலூரில் அரசுப் பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா.நாகம்மை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மேல்நிலை வகுப்பில் பணியாற்றும் தமிழ், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் ஆசிரியர்கள் 4 பேர் சமீபத்தில் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து, மாணவி கள் மற்றும் பெற்றோர் இரு தினங்களுக்கு முன்பு போராட்டத் தில் ஈடுபட முயன்றனர். அவர்களை, காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பினர்.
பள்ளியில் ஆசிரியர் பற்றாக் குறை நிலவும் நிலையில் மாணவி கள் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனால், பணியிட மாற்றத்தை திரும்பப்பெற முடியாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில், ஆசிரியர் பணியிட மாறுதலில் ஏமாற்றம் அடைந்த மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மைதானத்தில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன், அங்கு லட்சுமி ஆகியோர் விரைந்து சென்று, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையேற்று மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளியில் போதுமான ஆசிரி யர்கள் உள்ளனர். அங்கு ஆசிரியர் பற்றாக்குறை எதுவும் இல்லை. மாணவிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணி நிரவல் அடிப்படையில் கூடுதலாக இருந்த ஆசிரியர்களை மட்டும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளி களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றனர்.