திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடந்த 5-ம் நாள் உற்சவத்தில் ரிஷப வாகனத்தில் விநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் மாட வீதியில் வலம் வந்தனர். 
தமிழகம்

கார்த்திகை தீபத் திருவிழா | அண்ணாமலையார் கோயிலில் நாளை மகா தேரோட்டம்: காலையில் தொடங்கி இரவு வரை நடைபெறும்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை (3-ம் தேதி) மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த நவ.24 இரவு தொடங்கியது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.

இதில் 5-ம் நாள் உற்சவம் நேற்றுநடைபெற்றது. ரிஷப வாகனத்தில் விநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிமாட வீதியில் நேற்று காலை பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில், வெள்ளிபெரிய ரிஷப வாகனம் உள்ளிட்டவாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா நேற்றிரவு நடைபெற்றது.

இந்நிலையில், சம்மந்த விநாயகர் சன்னதியில் பஞ்ச ரதங்களுக்கு பொருத்தப்படும் கலசங்களுக்கு சிறப்பு பூஜை நேற்று காலை நடைபெற்றது. கலசங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர், பஞ்ச ரதங்களுக்கு கலசங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் பவனி வரும் 5 ரதங்களுக்கும் கலசங்கள் பொருத்தப்பட்டன.

திருவண்ணாமலை தேரடி வீதியில் மகா ரதத்துக்கு
கலசம் பொருத்தும் பணி நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் மகா தேரோட்டம் நாளை (நவ.3) நடைபெறவுள்ளது. சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள மகா தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் திருத்தேரின் புறப்பாடு இருக்கும். இதற்கு, அடுத்ததாக வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரின் தேர்கள் அடுத்தடுத்து புறப்படும்.

ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் சுமார் 16 மணி நேரம் தொடர்ச்சியாக இரவு வரை நடைபெறும். மகா தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளை தரிசனம் செய்யவுள்ளனர்.

63 நாயன்மார்கள் வீதியுலா: 6-ம் நாள் உற்சவம் இன்று நடைபெற உள்ளன. மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் மாட வீதியில் இன்று காலை வலம் வந்து அருள்பாலிக்கவுள்ளனர். மேலும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களின் மாட வீதியுலா நடைபெறவுள்ளது. 63 நாயன்மார்களை விரதம் இருந்து வரும் பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லவுள்ளனர். வெள்ளிதேரோட்டம் இன்றிரவு நடைபெறஉள்ளது.

டிஜிபி ஆய்வு: அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு நேற்று மாலை ஆய்வு செய்தார். ஐஜி கண்ணன் தலைமையில் 4 டிஐஜிக்கள், 27 எஸ்.பி.,க்கள் உட்பட 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக டிஜிபி தெரிவித்தார். தேர்கள் அடுத்தடுத்து புறப்படும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும்.

SCROLL FOR NEXT