சென்னை: பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமான ‘போக்சோ’ குறித்து பெண்கள் மற்றும் மாணவ - மாணவிகள் அறியும் வகையில் அவர்களுக்கு போலீஸார் அவ்வப்போது விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னையில் நேற்று முன்தினம் 179 இடங்களில் போதைப் பொருள்எதிர்ப்பு, அதன் தீமைகள் குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.
இம்முகாம்களில் 12 ஆயிரத்து200 பேர் கலந்து கொண்டு காவல் துறையின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தனர். மேலும், தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவடைந்தனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், "பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள், மாணவ, மாணவிகள் உடனடியாக காவல் துறையில் புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் காவல் துறையை அணுகலாம்" என்றார்.