சென்னை: பிரதமரின் பாதுகாப்பை அவருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லியில் இருந்து வந்து ஏற்ற பிறகு, தமிழக காவல்துறைக்கு அங்கு எந்த பணியும் கிடையாது என்பது காவல் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு தெரியாதா என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, பாதுகாப்பு உபகரணங்கள் சரிவர இயங்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு பிரிவு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் ஒரு இடத்துக்கு வந்தால் அவரது பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும், அவருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழக காவல்துறையினர் அவர்களுக்கு உதவிதான் செய்வார்கள். இதில் எந்த பணியும் தமிழக காவல்துறைக்கு இருக்காது. பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் முழு பொறுப்பையும் ஏற்றால் முதல்வர்கூட உள்ளே நுழைய முடியாது. அந்த அளவில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்.
இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அண்ணாமலைக்கும் அமித் ஷாவுக்கும் என்ன பிரச்சினையோ என்பது தெரியவில்லை. அமித் ஷாதான் உள்துறை அமைச்சர். அவர் மீதான கோபத்தை இங்கு வந்து காட்டுகிறார்போல் தோன்றுகிறது. காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு இந்த அடிப்படை விஷயம்கூட தெரியவில்லை.
டெல்லியில் இருந்துவரும் அதிகாரிகளை தாண்டி எந்த தவறும்நடைபெறாது. எனவே, அண்ணாமலை குற்றம் சொல்வது மத்திய உள்துறையைதான்.
ஆளுநர் திட்டமிட்டு தமிழக மக்களை அவமதிக்கும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினர்களால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத்தை அனுமதிக்க கூடாது எனசெயல்படுகிறார். அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த அவர்,மசோதாவுக்கு ஒப்புதல் தராததுஏன் என தெரியவில்லை. அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறி நடப்பதால்தான் அவரை திரும்ப பெற வேண்டும் என்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.