புதிய பார்சல் சேவை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய ரயில்வே வாரிய செயல் இயக்குநர் சத்தியகுமார், மேற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் சுமித்தா அயோத்யா உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

ரயில்வே, அஞ்சல் துறை இணைந்து பார்சல் சேவை ஜனவரியில் அறிமுகம்: வீடு தேடி வந்து பொருட்களை பெற வசதி

செய்திப்பிரிவு

கோவை: ரயில்வே மற்றும் அஞ்சல்துறை சார்பில் புதிய பார்சல் சேவை திட்டம் கோவையில் 2023 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கோவை அவிநாசி சாலை தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. ரயில்வே வாரியத்தின் செயல் இயக்குநர் சத்தியகுமார் தலைமை வகித்தார். தெற்கு ரயில்வே முதன்மை வணிகப் பிரிவு மேலாளர் முருகராஜ், மேற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் சுமித்தா அயோத்யா, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு பின், சத்தியகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுவாக, ரயிலில் சரக்குகளை அனுப்ப சம்பந்தப் பட்டவர்களே ரயில் நிலையத்துக்கு சரக்குகளை கொண்டு செல்ல வேண்டும். ஆனால், புதிய திட்டத்தின்படி வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட சரக்குகள் அனுப்ப விரும்பும் இடத்துக்கே நேரடியாக ஊழியர்கள் சென்று சரக்குகளை பெற்று அனுப்பிவைப்பார்கள். சம்பந்தப்பட்ட இடத்துக்கே சரக்குகள் கொண்டு சேர்க்கப்படும். இதன் மூலம் சிரமமின்றி நாட்டின் எந்த பகுதிக்கும் ரயில்கள் மூலம் சரக்குகளை தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அனுப்பலாம்.

இவ்வாறு அனுப்பப்படும் சரக்குகள் எந்த இடத்தில் உள்ளன என்பது குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது. கோவையில் ஜனவரி மத்தியில் இச்சேவை அறிமுகமாகும். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT