மத்திய அரசின் கீழ் உள்ள குழந்தைகள் தத்தெடுப்பு ஒழுங்கு முறை ஆணையம் (காரா) வெளி யிட்டுள்ள தகவலின்படி குழந்தை கள் தத்தெடுப்பு கடந்த 6 ஆண் டுகளில் 40 சதவீதம் குறைந் துள்ளது. இதேநிலை தொடர்ந் தால் நிலைமை மிக மோசமாக இருக்கும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் தத்தெடுப்பதை ஊக்குவிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி சமீபத்தில் அறி வுறுத்தியிருந்தார். இந்நிலையில், குழந்தைகள் தத்தெடுத்தலை ஊக்கப்படுத்த மாநிலம்தோறும் நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் நிதியம் (யுனிசெஃப்), இந்திய குழந்தைகள் நலச் சங்கத்துடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்ப டுத்தி வருகிறது.
ஆதரவற்ற நிலையில் 4 சதவீதம்
குழந்தைகள் நலச் சங்க மாநில துணைத் தலைவர் எம்.பி.நிர்மலா கூறியதாவது: உலக அளவில் 3-ல் 1 பங்கு குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர். ஆனால், அவர்களது நிலை எப்படி உள்ளது என்பதையும், பாதுகாப்புக்கு என்ன செய்ய உள்ளோம் என்பதையும் கவனிக்க வேண்டும். நாட்டில் உள்ள குழந்தைகளில் 4 சதவீதம் குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.
இது டெல்லியின் மக்கள் தொகையைவிட அதிகம். அதிலும் பலர் ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இறந்து விடுகின்றனர். இதைத் தடுக்க, தத்தெடுத்தல் மூலம் அவர்களை குடும்பச் சூழலில் வளர்க்க வேண்டியது அவசியம்.
சமீபத்திய ஆய்வு முடிவுகளில் இந்தியாவில் 1,000 குழந்தைகளில் 95 குழந்தைகள் கருவிலேயே இறந்துவிடுவதாகவும், 70 குழந் தைகள் ஒரு வருடத்துக்குள் இறப் பதாகவும், 50 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வாழ்கிறார்கள் எனவும் தெரிய வருகிறது. 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளில் 50 சதவீதத்தினர் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் ஏதாவது ஒரு வகையில் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்கிறது அந்த ஆய்வு. தத்தெடுப்போரின் எண் ணிக்கையை அதிகப்படுத்தி இந்த நிலையை மாற்ற அரசும், தன் னார்வ அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன.
குறையும் தத்தெடுத்தல்
பிறப்பு விகிதத்துக்கு ஏற்ப தத்தெடுப்பை ஊக்கப்படுத்த வேண்டியுள்ளது. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் விகிதம் 1,200 1,500 வரை இருந்தது. அந்த நிலை தொடர்ந்திருந்தால், இப்போது ஆண்டுக்கு 5,000 குழந்தைகள் வரை தத்தெடுக்கப்பட வேண் டும். ஆனால் நிலைமை அப்படி யில்லை. மிகவும் குறைந்த அளவிலான குழந்தைகளே தத் தெடுக்கப்படுகிறார்கள். இதை மத்திய அரசே வேதனையுடன் தெரிவித்துள்ளது.
2010-ல் 5,693 குழந்தைகள் உள்நாட்டிலும், 628 குழந்தைகள் வெளிநாட்டினராலும் தத்தெடுக் கப்பட்டனர். நடப்பு ஆண்டில் (நவம்பர் வரை) சுமார் 40 % குறைந்து 3,011 குழந்தைகள் இந்தியாவிலும், 666 குழந்தை கள் வெளிநாட்டினரும் தத்தெடுத் துள்ளனர். தத்தெடுப்பதைவிட, வளர்ப்புக் குழந்தைகளாக வளர்க்கவே முயற்சிக் கின்றனர். இந்த மனப்போக்கு குழந்தைகள் எதிர்காலத்தை மாற்றிவிடும்.
பெண் குழந்தைகள்
காப்பகங்கள் இருந்தாலும், குடும்பச் சூழலில்தான் குழந்தை நல்ல முறையில் வளரும். தத்தெடுத்த குழந்தைகளையும், தமக்குப் பிறந்த குழந்தைகளாகக் கருதி வளர்த்தால் எந்தப் பிரச் சினையும் இருக்காது. அதற்கு முதலில் மனதளவில் தயாராக வேண்டும். முன்பு, ஆண் குழந் தைகள் மீது இருந்த ஈர்ப்பு மாறி, பெண் குழந்தைகளையும் தத்தெடுக்கிறார்கள்.
ஆதரவற்று விடப்படுவதிலும், தத்தெடுக் கப்படுவதிலும் பெண் குழந் தைகள்தான் அதிகமாக உள்ளனர். மத்திய அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் தத்தெடுப்பு ஒழுங்குமுறை ஆணையம் மூலம் தத்தெடுப்பதற்கான வழிமுறைகள் எளிமையாகிவிட்டன.
ஆன்லைனில் விண்ணப் பித்தால், இடைத்தரகர்கள் இன்றி எளிதில் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியும். இந்த வசதி களை அரசு மூலமும், தன்னார்வ அமைப்புகள் மூலமும் மக்களுக்குத் தெரிவித்து, தத்தெடுத்தலை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமூக நலத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தத்தெடுக்க முன்பு நிறைய அமைப்புகள் இருந்தன. ஆனால் அதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க, தத்தெடுத்தல் முழுவதும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘காரா’ (மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு ஒழுங்குமுறை ஆணையம் ) கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இணையதளத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். அதன்பேரில் இணையதளத்திலேயே விண்ணப்பிக்க முடியும். மாவட்ட சமூக நலத் துறை, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் மூலமாகவும், மாநிலம்தோறும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு தத்தெடுப்பு அமைப்புகள் (தமிழகத்தில் 14 அமைப்புகள் உள்ளன) மூலமும் குழந்தைகளைத் தத்தெடுக்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அனைத்துமே ‘காரா’ அமைப்பின் மூலமே நடைமுறைப்படுத்தப்படும். காராவைத் தொடர்புகொள்ள 1800-11-1311 என்ற இலவச தொலைபேசி எண்ணும் உள்ளது’’ என்றனர்.