சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரிடம் போலீஸார் வரும் 6-ம் தேதி விசாரணை நடத்த உள்ளனர்.
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்து வீராங்கனையான இவர் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வலது கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மாணவிக்கு கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் மூட்டுச் சவ்வு சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவருக்கு சுருக்கு கட்டு மிகவும் இறுக்கமாகப் போடப்பட்டதால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு, ரத்த நாளங்கள் பழுதான நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாணவியின் வலது கால் அகற்றப்பட்டது. சிறுநீரகம், ஈரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 15-ம் தேதி மாணவி பிரியா மருத்துவமனையிலேயே மரணம் அடைந்தார்.
5 பேர் மீது குற்றச்சாட்டு: மாணவிக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், பணியிலிருந்த மருத்துவ அதிகாரி (மருத்துவர்), எலும்பு சிகிச்சை மருத்துவர் மற்றும்மருத்துவப் பணியாளர் (வார்டு ஊழியர்) என 5 பேரின் கவனக்குறைபாடு, அலட்சியம் பிரியாவின் மரணத்துக்குக் காரணமென மருத்துவக் குழு தெரிவித்தது.
இதன் அடிப்படையில் மாணவி பிரியா மரண வழக்கை சந்தேக மரணம் என்ற பிரிவிலிருந்து, அலட்சியமாகச் செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் என்ற சட்டப் பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிந்து பெரவள்ளூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க குற்றச்சாட்டுக்கு உள்ளான 4 மருத்துவர்களில் கே.சோமசுந்தர், ஏ.பால்ராம் சங்கர் ஆகிய இரு மருத்துவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்களிடம் வரும் 6-ம் தேதி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு, விசாரணை அதிகாரி, காவல் துறை துணை ஆணையர் கொண்ட விசாரணைக் குழு மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது. மருத்துவர்களின் பாதுகாப்பு கருதி ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.