மதுரை: கூடுதலாக ரூ.50 வசூலித்த அசைவ ஓட்டலுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், என்.ஸ்டாலின், மதுரை வழக்கறிஞர்கள் குமாஸ்தா சங்கச் செயலாளர் எஸ்.கதிரேசன். இம்மூவரும் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அசைவ ஓட்டலுக்கு 22.10.2016 பிற்பகல் நாங்கள் 3 பேரும் சாப்பிடச் சென்றோம்.
எங்களுக்கு தரப்பட்ட பில்லில், சாப்பிட்ட உணவுக்கான தொகை மட்டுமின்றி ஹெல்ப் சில்ரன் கேன்சர் என்ற தலைப்பில் ரூ.50 மற்றும் அதற்கு வாட் ரூ.12.70, சேவை வரி ரூ.38.10 என மொத்தம் ரூ.100.80 கூடுதலாக வசூலிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஓட்டல் காசாளரிடம் கேட்டதற்கு, அனைத்து வாடிக்கையாளர் களிடமும் இப்படித்தான் வசூலிக்கிறோம் என்றார். எங்களை கேட்காமல் பணம் வசூலிப்பது தவறு. மேலும் நன்கொடை பணத்துக்கு வரி வசூல் செய்தது சட்டவிரோதம். இதனால் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை மதுரை நுகர்வோர் நீதிமன்ற தலைவர் என்.பாரி, உறுப்பினர்கள் கே.வி.விமலா, கே.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்களிடம் ஹெல்ப் சில்ரன் கேன்சர் என்ற தலைப்பில் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் நிர்வாகம் தரப்பில் குழந்தைகள் கல்விக்காக பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த தலைப்பில் கூடுதல் பணம் வசூலிக்கவில்லை. இதனால் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தகம் காரணமாக மனுதாரர்களுக்கு ஓட்டல் நிர்வாகம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.55 ஆயிரத்தை 2 மாதத்தில் வழங்க வேண்டும். தவறினால் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.