தமிழகம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது?

செய்திப்பிரிவு

அதிமுக பொதுக்குழு கூடும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுக பொதுச் செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 5-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப் பின், அதிமுக எம்எல்ஏக்களால் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் 5-ம் தேதி இரவே அவர் முதல்வராகவும் பொறுப் பேற்றார். 31 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால், ஜெயலலிதா தனது அடுத்த அரசியல் வாரிசு யார் என்பதை அறிவிக்காத நிலையில், கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கிடையில் விதிகளின்படி இந்த மாதம், அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டும். கடந்தாண்டு டிசம்பர் மாதம் இதே போல் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தார். ஆனால், இப்போது அவர் இல்லை. எனவே, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். பொதுச் செயலாளராக யாரை தேர்வு செய்வது என்பதற்கான ஆலோசனைகள் மூத்த நிர்வாகிகள் மட்டத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகலாம் என்றும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், அதன் பின் ஒரு நாளில் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT