தமிழகம்

‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ முறையை ரத்து செய்ய வேண்டும்: வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மனு

செய்திப்பிரிவு

சென்னை: தென்சென்னை வடக்கு, வடசென்னை மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி பூந்தமல்லியில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வரித் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் எம்.அமல்ராஜ் ஆகியோர் நேற்று கவன ஈர்ப்பு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு செய்வது, ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ செய்வது தொடர்பான அறிவிப்புகளை வணிக வரித்துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ தொடர்பான அறிவிப்பை வணிக வரித் துறை கடந்த செப்.6-ம் தேதி மீண்டும் வெளியிட்டது.

அதன்படி, சில்லறை வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் வணிக வரித் துறை அதிகாரிகள் ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ என்ற பெயரில் ஆய்வுநடத்தி, ரூ.20 ஆயிரம் வரை அபராதம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன.

சில்லறை வியாபாரிகள் அனைவரும் பொருட்களை வாங்கும்போது, அதற்கான வரியை செலுத்தியே பொருட்களை வாங்கி வந்துவிற்பனை செய்கின்றனர். மக்களுக்கு விற்பனை செய்யப்படும் அந்த பொருட்கள் ஏற்கெனவே வரிவிதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் சில்லறை விற்பனை கடைகளில் வணிக வரித் துறை அதிகாரிகள், ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ என்றபெயரில் பொருட்களை வாங்கி,அதற்கு ரசீது தரப்படவில்லைஎன்று கூறி, அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சில்லறை, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.

எனவே, முதலில் அனைத்து வணிகர்களுக்கும் ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் விற்று-வரவு செய்யும் வணிகர்களிடம் மட்டுமே ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு வணிகர்களுக்கு விலக்கு அளித்து, இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT