காஞ்சிபுரம் மாநகராட்சி 48-வது வார்டில் உள்ள கணேஷ் நகரில் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை. 
தமிழகம்

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொலிவுபெறும் 75 ரேஷன் கடைகள்

செய்திப்பிரிவு

சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ரேஷன் கடைகளை பொலிவுபெறச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகள் மக்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பாதை வசதி, கட்டிடத்தின் வடிவமைப்பில் மற்றம், கழிப்பறை வசதிகள், போதிய நிழல் வசதி, பொருட்கள் வைப்பறையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கூட்டுறவுத் துறை நிதி மற்றும் பல்வேறு துறைகளின் நிதி மூலம் ரேஷன் கடைகளை புதுப்பொலிவு பெறச் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, நிதி ஒதுக்கும் துறைகள் தொடர்பான விளம்பரங்களை சுற்றுச் சுவர்களில் வரைந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி 48-வது வார்டில் உள்ள கணேஷ் நகரில், உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.78 லட்சம் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய ரேஷன் கடை கட்டிடம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையில், சிசிடிவி கேமரா, புராதன சின்னங்களின் ஓவியம், திருவள்ளூவர் ஓவியம் என முன்மாதிரிக் கடையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையின் முன் பூங்கா, மாற்றுத் திறனாளிகளுக்கான பாதை, மழைநீர் சேகரிப்பு, வாடிக்கையாளர் அமரும் வசதி உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை 2,252 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளன. பல பகுதிகளில் கடைகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 3,662 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன” என்றனர்.

SCROLL FOR NEXT