மதுரை: மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது, தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என திமுக கவுன்சிலர்களுக்கு கட்சித் தலைமை ‘வாய்ப்பூட்டு’ போட்டுள்ளது. அதனால், நேற்றைய கூட்டத்தில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் மவுனம் காத்தனர்.
மதுரை மாநகராட்சியில் 69 திமுக கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளரான மேயர் இந்திராணிக்கு ஆதரவாக ஒரு தரப்பும், மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி, புறநகர் மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, மணிமாறன் ஆகியோருக்கு ஆதரவாக மற்றொரு தரப்பும் என தனித்தனி கோஷ்டிகளாகச் செயல்படுகின்றனர். அதனால், மாநகராட்சிக் கூட்டங்களில் திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், அவர் கொண்டு வரும் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமலும் அமளியில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
கடந்த கூட்டத்தில் மேயர் இந்திராணி கொண்டு வந்த மாநகராட்சி அதிகாரிகளின் பதவி உயர்வுத் தீர்மானத்துக்கு திமுக கவுன்சிலர்கள்தான் முதலில் எதிர்ப்புத் தெரிவித்து அதனை நிறைவேற்றக் கூடாது என்று போர்க்கொடி தூக்கினர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் சேர்ந்து கொண்டதால் நெருக்கடிக்கு ஆளான மேயர் இந்திராணி, வேறுவழியில்லாமல் அந்தத் தீர்மானத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். திமுக மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்த தீர்மானத்தை அக்கட்சி கவுன்சிலர்களே அதிமுகவினருடன் சேர்ந்து ரத்து செய்ய வைத்தது மேயர் தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே தீர்மானத்தை செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற மேயர் இந்திராணி திட்டமிட்டார். ஆனால், நிறைவேற்ற விடக்கூடாது என்பதில் மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்கள் உறுதியாக இருந்தனர். திமுக கவுன்சிலர்களின் இந்த கோஷ்டி பூசலை அறிந்த கட்சித் தலைமை நேற்று முன்தினம் திடீரென மதுரை மாநகர, புறநகர் மாவட்டச் செயலாளர்களை அழைத்து, ‘நமது கட்சி கவுன்சிலர்களே, மாநகராட்சி கொண்டு வரும் தீர்மானங்களை எதிர்ப்பதா? என்றும்
உட்கட்சிப் பூசலைப் பகைமையாகக் கொண்டு மாநகராட்சி கூட்டம் போன்ற பொதுவெளியில் மேயருக்கு எதிராகச் செயல்படக்கூடாது என்றும் அதனால், கட்சிக்குத்தான் பின்னடைவு ஏற்படும் என்றும் அறிவுரை வழங்கியது.
மேலும், மாநகராட்சி விவகாரங்கள் எதுவும் தவறாக இருந்தால் கட்சித் தலைமையிடம் சொன்னால் அதற்குத் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் திமுக கவுன்சிலர்களை அழைத்து மாநகராட்சிக் கூட்டத்தில் மேயருக்கு எதிராகவும், மாநகராட்சி கொண்டு வரும் தீர்மானங்களையும் திமுக கவுன்சிலர்கள் எதிர்க்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்தே, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மட்டும் வார்டு பிரச்சினைகளை கனிவாக மேயரிடம் கூறி அமர்ந்தனர். திமுக கவுன்சிலர்கள் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாகக் கூட்டத்தில் பங்கேற்றுச் சென்றனர். கூட்டத்தில் இடை இடையே திமுக கவுன்சிலர்களில் சிலர் சைகை மொழியில் பேசிக் கொண்டனர். மேயர் தரப்பினரிடம் கேட்டபோது, ‘எங்களுக்குள் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம்,’ என்றனர்.