புதுச்சேரி: “புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலை உள்ளன. புதிதாக 6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க உள்ளனர். ஏற்கெனவே ஓடும் மதுபான ஆறு, இனி மதுபானக் கடலாக மாறிவிடும்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் காமராஜர் மணி மண்டபம் அருகே மதுபானக்கடையை அமைக்க கலால் துறை அனுமதி தந்துள்ளது. இக்கட்டிடம் பாஜக பிரமுகருக்கு சொந்தமானது. இப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதனால் அப்பகுதியான சாமிபிள்ளைத்தோட்டம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய மதுக்கடை வரும் பகுதியில் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயில், காமராஜர் மணிமண்டபம் மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் புதிதாக மதுபானக்கடை கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தி சாமிபிள்ளைத் தோட்டம் மக்கள் மதுபானக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்தனர். இக்குழுவின் சார்பில் மதுக்கடை திறக்கக்கூடாது எனக்கூறி காமராஜர் மணி மண்டபம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காமராஜர் மணி மண்டபம் அருகே பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "புதுச்சேரியில் 350-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டீக்கடையில் கூட மதுபானம் விற்க அனுமதி அளிக்கப்போவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலை உள்ளன. புதிதாக 6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க உள்ளனர். இதில் ஊழல் நடந்திருப்பதாக நான் குற்றம்சாட்டி வருகிறேன். ஏற்கெனவே ஓடும் மதுபான ஆறு, இனி மதுபானக் கடலாக மாறிவிடும். ரங்கசாமி டம்மி முதல்வர். அவர் பாஜகவின் அடிமை. முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் புரோக்கர்களின் கூடாரமாக உள்ளது. லஞ்சம், ஊழல் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை.
மக்கள் பிரச்சினைகளை கவனிக்க ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை. பெண்கள் போராட்டத்தின் மூலம்தான் மதுக்கடைகளை அகற்ற முடியும். அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். அரசியலில் நான் இருப்பதை காட்டுவதற்காக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறுவதாக ஓடுகாலி அமைச்சர் சொல்லியுள்ளார். நான் யார் என மக்களுக்கு தெரியும். அரசியலில் நான் இருப்பதை காட்ட வேண்டிய அவசியமில்லை" என்றார்.
முன்னதாக மதுக்கடை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைத்திலிங்கம் எம்பி பேசுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக பல நூறு மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கணவர்களை இழக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். முதல்வர் விதவை பென்ஷனை உயர்த்தலாம் என்கிறார். மதுக்கடைகளை மூடினால்தான் விதவைகள் எண்ணிக்கை குறையும். பாவ மூட்டைகளை சுமக்காதீர்கள். எனக்கும் சேர்த்து நமக்கான காலம் நெருங்கிவிட்டது. புண்ணியத்தை சேருங்கள். மக்கள் குரலுக்கு மதிப்பளித்து மதுபான கடைகளை மூடுங்கள்" என்று குறிப்பிட்டார்.