சென்னை: சென்னை - மெரினா கடற்கரையில் இலவச வைஃபை சேவையை வழங்கவுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்கு மாமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச வைஃபை வழங்கப்படுகிறது. 15-வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. இதைத் தவிர்த்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இலவச வைஃபை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை முடிவில் 2 தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்க உள்ளன. இதற்கு சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இன்று (நவ.29) அனுமதி அளிக்கப்பட்டது.