சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல்அளிக்க வேண்டும் என அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்திருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்துக்கு பிழைப்பு தேடி வந்து,தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த பெண், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கடந்த 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களைப் பறிகொடுத்தும்கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை.
ஒருபுறம் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது, மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல்அளிக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை ஆளுநர்உணர வேண்டும். பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு இனியும்தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டம் நேற்று முன்தினம் (நவ.27) காலாவதியாகிவிட்ட நிலையில், பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் தடை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தஉயிர் குடிக்கும் விளையாட்டை தடை செய்வதில் தமிழக அரசு உறுதியாக இருந்த நிலையில், அதை நீர்த்துப் போகச் செய்வது போல இருக்கிறது ஆளுநரின் செயல்பாடு. தமிழக மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீதுதுளிகூட அக்கறையில்லாமல் அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பதுதான் ஆளுநரின் பணியா? தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆளுநர் தமிழகத்துக்கு தேவையா? எனவே, ஆளுநரை குடியரசுத் தலைவர் உடனே திரும்ப பெற வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இரண்டொரு நாளில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தந்து மசோதாவை அனுப்ப வேண்டும். இல்லையெனில் டிச.1-ம் தேதிஆளுநர் மாளிகை அருகே என்தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டதற்கு பொறுப்பேற்று, தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: எதிர்வரும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில், மீண்டும் ஒரு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.