சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் கொடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் மானியம் பெற மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே 2 மாதங்களுக்கு முன்புதான் மின் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு பொதுமக்களை தமிழக அரசு வஞ்சித்தது. இந்நிலையில், ஆதார் இணைப்புக்கு போதுமான அவகாசம் கொடுக்காமல் மக்களை இன்னலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
எந்த ஒரு விளக்கமும் தராமல், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், மின் கட்டணம் செலுத்த முடியாது என்று அறிவித்த திமுக அரசு, மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு டிசம்பர் 31-ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மின் பயனாளிகளுக்கு, சத்தம் இல்லாமல் ஒரு புதிய கட்டணத்தை மின்வாரியம் உயர்த்தியுள்ளது.
அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், இனி அவர்களின் கட்டிடத்துக்கு உள்ளேயே இருக்கும் மாடிப்படி, நடைபாதை, வராண்டா, புல்வெளிகள், பொது இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு, விதிக்கப்படும் கட்டணம் 1,500 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது குடியிருப்பில் இருந்தாலும், தொழிற்சாலைக்கான கட்டணம்போல, யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் அளவில் புதிய கட்டணம் விதிக்கப்படுகிறது.
பொது பயன்பாட்டு கட்டணம் என்ற பெயரில், இந்தியாவிலேயே மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் தமிழக அரசு, அதை மறைப்பதற்காக, ஆதார் அட்டை என்ற புதிய சர்ச்சையை அவசர அவசரமாக அரங்கேற்றுகிறது. எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தமிழக அரசு கால அவகாசம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கோரிக்கை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் படிப்படியாக 100 யூனிட் இலவச மின்சார சலுகையைப் பறிப்பதே மத்திய அரசின் நோக்கம். இதை தமிழக மின்சார வாரியம் செயல்படுத்த முன்வந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாரை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சார சலுகை பறிக்கப்படாது என மின்சாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிஃப்ட்ஆகியவற்றுக்கான மின்கட்டணம், வணிக பயன்பாட்டுக் கட்டணமாக (1-டி) மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 கட்டணமும், நிலைக் கட்டணம் ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது. காலங்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பை தற்போது வணிக பயன்பாட்டுக் கட்டணமாக மாற்றியுள்ளதால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்தியாளர்களும் மின் கட்டண உயர்வால் தொழில் செய்ய முடியாத அளவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நிரந்தரக் கட்டணம் 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, உச்ச நேர பயன்பாட்டுக் கட்டணம் மூலம் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதை கண்டித்து சென்னையிலும், கோவையிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடந்த 25-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் விளக்குகள், மோட்டார், லிஃப்ட் ஆகியவற்றுக்கு பழைய முறையிலேயே (1-ஏ) கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வையும், நிரந்தரக் கட்டணம், உச்ச நேர பயன்பாட்டுக் கட்டணம் போன்றவற்றையும் திரும்ப பெற வேண்டும்.