தரமான கட்டிடங்கள் கட்டப்படுவதை உறுதி செய்யவும் தவறு செய்யும் பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ‘கட்டுமானப் பொறியாளர்கள் கவுன்சில்’ என்ற சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப் பின் மாநிலத் தலைவர் ஆர்.தாயு மானவன், செயலர் பி.சிவக்குமார், கட்டமைப்பு பொறியாளர் பி. நல்லதம்பி ஆகியோர் சென்னை யில் நிருபர்களுக்கு செவ்வாய்க் கிழமை அளித்த பேட்டி:
தரமற்ற கட்டிடங்கள் நிறைய உருவாகி வருகின்றன. தற்போதைய சூழலில் தரமற்ற கட்டிடங்களை கட்டியதற்கு பொறுப்பாளர்கள் யார், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு திட்டவட்டமான வரைமுறைகள் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் தரமான கட்டிடங்கள் கட்டப்படுவதை உறுதி செய்யவும், போலி பொறியாளர்கள் ஊடுருவுவதை தடுக்கவும், தவறு செய்யும் பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ‘கட்டுமானப் பொறியாளர்கள் கவுன்சில்’ என்ற சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
கட்டிடங்கள், குறிப்பாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்படும்போது அதற்கான கட்டமைப்பு வடிவமைப்பு செய்யும் பொறியாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முன்அனுபவம் இருத்தல் வேண்டும். அடுக்குமாடி கட்டிடப் பணிகளில் ஈடுபடும் கட்டிடப் பொறியாளர்களுக்கும் அதேஅளவு அனுபவம் இருக்க வேண்டும். கட்டிடம் கட்டும்போது ஒவ்வொரு நிலையிலும் அதன் தரம் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.
கட்டிடம் தரமானதாக இல்லையென்று தெரிந்தால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களை கவுன்சிலில் இருந்து நீக்கவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இதன்மூலம் யார் வேண்டுமானாலும் கட்டுமானத் தொழிலில் ஈடுபடலாம் என்ற நிலை மாறும். அதற்கான சட்டத்தை இயற்ற முதல்வர் ஜெயலலிதா ஆவன செய்ய வேண்டும். குஜராத்தில் இதுபோன்ற சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பொறியாளர் மசோதாவை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.