தமிழகம்

சென்னை 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடங்களை நீட்டிக்க சாத்தியம் உள்ளதா? - ஆய்வு செய்ய ஆலோசனை நிறுவனம் விரைவில் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தட நீட்டிப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசனை நிறுவனம் விரைவில் நியமிக்கப்பட உள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூ.63,246 கோடியில் மாதவரம் - சிறுசேரி (45.8 கி.மீ.), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் (47 கி.மீ.) என 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இந்த வழித்தடங்களை நீட்டிப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

அந்த வகையில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க ஆலோசிக்கப்படுகிறது. இதுதவிர, மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில், திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாக ஆவடி வரை 17 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில், சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வரை நீடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இதில் 8 பொறியியல் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘3 வழித்தடங்களின் நீட்டிப்பு பகுதிகளில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல், அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடங்களில் பயணத் தேவை, அதற்கான மதிப்பீடு, தேவையான நிதி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும்’’ என்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் கூறும்போது, ‘‘இந்த 3 வழித்தடங்களின் நீட்டிப்பு தொடர்பாக விரிவான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்க விரைவில் ஆலோசனை நிறுவனம் (வடிவமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனம்) தேர்வு செய்யப்படும். நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம் 3 மாதங்களில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்து அளிக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT