திங்கள்கிழமை பகல் 11 மணிக்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகம். அதன் வாசலை ஒட்டி, பார்வதிபுரம் சாலையில் மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அலைபேசியில் பேசிய படியே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் மினி லாரி நிற்பதை மறந்து, நேரே மோதினர்.
லாரியின் சக்கரங்களுக்குள் சிக்கிக் கொண்ட இரண்டு வாலிபர்களும் மூர்ச்சையாகினர். அடிபட்ட இடத்தை சுற்றிலும் ரத்தக்கறை சிதறியிருந்தது. அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள், அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே விழுந்தனர்.
ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதி முழுவதும் ரத்தக்கறை யானது. அவ்வழியே வந்த இளம்பெண்கள் ஓடி வந்து `அண்ணே... அண்ணே…' என கதறி அழுதனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கியவர்கள் தூக்கிச் செல்லப் பட்டனர்.
ஆட்சியர் அலுவலகம் வந்தவர் களும், பஸ் ஏறவும், கடைகளிலும் நின்றிருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். சம்பவத்தைப் பார்த்து அவர்கள் கூட்டமாய் ஓடி வந்தனர்.
அப்போது திடீரென ஒரு மைக் ஓசை.. 'பார்த்தீங்களா? ஒரு விபத்தால் எவ்வளவு பேர் துடிதுடித்துப் போகிறார்கள்? வாகனங்களில் வேகமாக செல்வதால் என்ன நன்மை கிடைக் கிறது? புறப்படும் இடத்துக்கு 5 நிமிடம் முன்பே புறப்படலாமே..' என பேசத் துவங்குகிறார் மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன்.
அப்போதுதான், அதிர்ச்சி அடைந்த பொதுமக்களுக்கு அச்சம்பவத்தின் உண்மை பின்னணி தெரிய வருகிறது. அது, விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி.
அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை, மதுரை காந்திஜி சேவா சங்கம் ஆகிய அமைப்புகள் இதை நடத்தின. ஒத்திகைதான் எனினும் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு தத்ரூபமாக அமைந்தது விழிப்புணர்வு ஒத்திகை.
எஸ்.பி., பேச்சு
விழிப்புணர்வு ஒத்திகைக்கு பின் எஸ்.பி., மணிவண்ணன் கூறியதாவது:
`சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பலவகை உத்திகளை கடைபிடித்து வருகி றோம். மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வின் மூலம் மட்டுமே சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். அதற்கு இந்த நிகழ்வு உதவும். ஒத்திகை என தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இனி வாகனங்களை மெதுவாக ஓட்டுவதாகவும் கூறினர்' என்றார்.
கோட்டாறு மறைமாவட்ட `களரி' அமைப்பை சேர்ந்தவர்கள் இதை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை நிறுவனர் தியோடர் சேம், நிகழ்ச்சி அமைப்பாளர் மரிய ஜோசப், மதுரை காந்திஜி சேவா சங்க நிறுவனர் கே.பிச்சை, மனிதம் அறக்கட்டளை நிறுவனர் சலீம், ராகம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிறுவனர் பிரமி, செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிகரிக்கும் விபத்துகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு 299 பேர் சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இதில் 113 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்று உயிர் இழந்தவர்கள்.
2014-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி வரை 144 பேர் சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளனர்.