கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரிகள் அரசாணை மூலம் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது.
சுகாதாரத் துறையின் கீழ் மாற்றப்பட்ட மருத்துவக் கல்லூரியை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவ பேராசிரியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. பலமுறை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சுமார்200 பேர் தங்களுக்கு ஊதியம்வழங்கக்கோரி நேற்று மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். பின்னர் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவக் கல்லூரியிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று ஊதியம் வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் துணைவேந்தர் டாக்டர் ராம கதிரேசனை சந்தித்து முறையிட்டனர்.
அப்போது அவர், “தமிழக அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அரசு உத்தரவு வந்தவுடன் ஒரிரு தினங்களில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார். இதையடுத்து மருத்துவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான ஊதியம் தற்போது சுகாதாரத் துறையில் இருந்து உயர்கல்வித்துறைக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலம் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மருத்துவக் கல்லூரியை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் ஊதியம் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.