தமிழகம்

முறையான திட்டமிடலின்றி அவசரத்தில் நடத்தப்பட்டதால் அரைகுறையாக முடிந்த பொருநை இலக்கியத் திருவிழா

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் 2 நாட்கள் நடத்தப்பட்ட பொருநை இலக்கியத் திருவிழாவில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் பங்களிப்பு அறவே இருக்கவில்லை. அவசர கதியில் பெயரளவுக்கு நடத்தி முடிக்கப்பட்ட இந்த விழா குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் இலக்கிய செழுமைமிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவிரி, சிறுவாணி மற்றும் பொருநை என 5 மண்டலங்களில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்தென்காசி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து பாளையங்கோட்டையில் நேருஜி கலையரங்கம், மேற்குகோட்டை வாசல், வ.உ.சி. மேடையரங்கம், பி.பி.எல் திருமண மண்டபம், நூற்றாண்டு மண்டபம் ஆகிய 5 இடங்களில் பல்வேறு நிகழ்வுகளாக விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சி, கனிமொழி எம்.பி. பங்கேற்ற நிகழ்ச்சி, நிறைவு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மாணவ, மாணவியரையும், கல்வித்துறையின் பல்வேறு திட்டத்திலுள்ள தன்னார்வலர்களையும், பெண்களையும் அழைத்து வந்திருந்தனர். இதனால் இந்த 3 நிகழ்வுகளுக்கு மட்டும் நேருஜி கலையரங்கம் நிரம்பியிருந்தது.

இங்கு நடைபெற்ற வேறுநிகழ்வுகளிலும் மற்ற அரங்குகளில் நடத்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றபார்வையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஞாயிறு விடுமுறை நாளிலும் சீருடையுடன் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தனர். எதற்காக வந்தோம், இங்கு என்னநடக்கிறது என்பது குறித்து எதுவும் முன்கூட்டியே அவர்களுக்கு தெரியவில்லை. விடுமுறை நாளில் அழைத்துவந்து கஷ்டப்படுத்துவதாக அவர்களில் சிலர் தெரிவித்தனர்.

புதியவர்கள் புறக்கணிப்பு: சிறுகதை, நாடகம், நாவலாசிரியர்கள், எழுத்தாளர்கள் சங்கமம், கரிசல், நெல்லை, நாஞ்சில் மற்றும் நெய்தல் ஆகிய வட்டார இலக்கிய மரபுகள் குறித்தஉரையாடல்கள் என்று பல்வேறு நிகழ்வுகளில் பல சிறந்த ஆளுமைகள் பங்கேற்று பேசினார்கள். ஆனால் அதை கேட்கவும், தமிழின் தொன்மையை உணரவும் இளையதலைமுறையினர் வரவில்லை.

பெரும்பாலும் இலக்கிய கூட்டங்களில் பேசும் பழகிய முகங்களே மேடைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இலக்கியம் என்றால் தாங்கள்தான் என்று இவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிகழ்ச்சிகளை ஆக்கிரமிப்பு செய்தனர். இதற்கு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களும் ஒத்துப்போகின்றன. திறமைவாய்ந்த இளைய தலைமுறையினருக்கும், புதியவர்களுக்கும் இப்போதும் அவர்கள் வழிவிடவில்லை.

திருநெல்வேலியிலுள்ள சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், 4 மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் தமிழியல்துறை, நாட்டார் வழக்காற்றியல், விசுவல் கம்யூனிகேஷன் போன்ற துறைகளில் பயிலும் மற்றும் ஆய்வு மேற்கொண்டுள்ள இளைஞர்களையும் பேசுவதற்கு அழைக்கவில்லை. பொருநை மண்சார்ந்த பல ஆளுமைகளையும், பொருநை கரையில் தமிழ் வளர்த்த ஆன்மிக பெரியவர்களையும் விழா ஏற்பாட்டாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

ஆளும் திமுகவிலுள்ள பல இலக்கிய ஆளுமைகளைகூட அழைக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலம்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ச்சிகளை 2 நாட்களில் நடத்தி முடித்து விட்டனர். போதிய காலஅவகாசம் எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியிலும், கல்விநிலையங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, 4 மாவட்ட நிர்வாகங்களும் ஒருங்கிணைந்து இந்த விழாவை மக்கள் விழாவாக நடத்துவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது.

இப்படியொரு விழா நடத்தப்படுவது குறித்தும், இத்தனை ஆளுமைகள் பேசவுள்ளது குறித்தும் முன்கூட்டியே திட்டமிட்டு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. நிகழ்ச்சி நிரல்களை கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பேனர்களாக வைத்திருந்தனர். விழா நடைபெற்ற அரங்கங்களுக்கு வெளியே பெரிய அளவுக்கு பேனர்களை வைத்து விளம்பரம் செய்யாததால் என்ன நடக்கிறது என்று பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பேருந்துகளில் செல்வோருக்கே தெரியாமல் போய்விட்டது.

அரசுத்துறைகள் தவறி விட்டன: பாளையங்கோட்டையை தாண்டி திருநெல்வேலி நகர்ப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கூட இந்த விழா நடைபெறுவது தெரியவில்லை. அப்படியிருக்க தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து எப்படி மக்கள் வருவார்கள்.

பல லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்ட இந்த இலக்கிய திருவிழாவை மக்கள் இயக்கமாக மாற்ற அரசுத்துறைகள் தவறிவிட்டன. இளைஞர்கள் மத்தியில் நமது இலக்கிய மரபுகளின் செழுமைகளை, இலக்கிய ஆளுமைகளின் பெருமைகளை கொண்டு சேர்க்கும் நோக்கம் நிறைவேறவில்லை.

பாளையங்கோடடையில் நடைபெறும் புத்தக திருவிழாவுக்கு மக்கள் அளித்த ஆதரவுகூட இந்த இலக்கியத் திருவிழாவுக்கு கிடைக்கவில்லை. ஊடக வெளிச்சமும், ஆளுங்கட்சியினரின் ஆதரவும் கிடைப்பதையே முக்கியமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த விழாவின் நோக்கம் நிறைவேறியதா என்பது கேள்விக்குறி தான்.

SCROLL FOR NEXT