மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் தேமுதிக தோல்வியடைந்த நிலையில், ‘உங்களுடன் நான்’என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்ட வாரியாக சென்று தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வந்தார்.
இதற்கிடையே, விஜயகாந் துக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கடந்த 13 ம் தேதி விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் 2 வாரமாக அவர் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
சிகிச்சை முடிவடைந்த நிலையில், 14 நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை திரும்பினார். அவருடன் பிரேமலதாவும் வந்தார். விஜயகாந்த் வருகை குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால், விமான நிலையத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரவில்லை.
விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார். அவர் மிகவும் சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், விஜயகாந்தும் பிரேமலதாவும் காரில் ஏறி வீட்டுக்குச் சென்றனர்.